மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் ஐக்கிய கிராம சேவையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் கண்டன ஆர்ப்பாட்டம்

(லியோ)

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின்  ஐக்கிய கிராம சேவையாளர் சங்கத்தின்  ஏற்பாட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.


மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கிராம சேவையாளர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டதை கண்டித்தும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வலியுறுத்தியும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம சேவையாளர் சங்கம் மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்களின ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இன்று புதன்கிழமை காலை பிரதேச செயலகத்தின் அலுவலக தினம் என்ற காரணத்தினால் அனைத்து பிரதேச செயலக ஊழியர்களும் கறுத்த பட்டியணித்து பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டதுடன் பிரதேச செயலகத்தில் இருந்து களுவாஞ்சிகுடி நகர் வரையில் கவன ஈர்ப்பு பேரணி நடாத்தப்பட்டதுடன பேரணியானது பிரதேச செயலகத்தினை வந்தடைந்ததும் பிரதேச செயலாளரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கிராம சேவையாளரின் கொலைக்கு எதிராக கோசங்கள் எழுப்பப்பட்டதுடன குற்றவாளிகளுக்கு கடும் தண்டனைபெற்றுக்கொடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

அரச அலுவலகர்களுக்கு எதிரான அடாவடித் தனங்களை நிறுத்துக', 'அரச அலுவலகர்களை சுதந்திரமாக கடமையாற்ற விடுங்கள் ', 'அரச உத்தியோகஸ்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்', 'நீதியை நிலைநாட்டுங்கள்' நல்லாட்சி அரசே நீதியை நிலைநாட்டு' விசாரணையை துரிதப்படுத்து போன்றவை எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம சேவையாளர் சங்க தலைவர் செ.ஞானசிறி,மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரட்னம் உட்பட பிரதேச செயலக ஊழியர்கள்,கிராமசேவையாளர்கள்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.