மாநகரசபை ஆணையாளரின் வீட்டின் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தினை கண்டித்தும் குற்றவாளிகளை விரைவாக கைதுசெய்யுமாறு வலியுத்தியும் மாநகரசபை ஊழியர்களினால் கவன ஈர்ப்பு போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடாத்தப்பட்டது.

இன்று காலை 8.30மணியளவில் மட்டக்களப்பு மாநகரசபையில் இருந்து மட்டக்களப்பு காந்தி பூங்கா வரையில் அமைதியான முறையில் கவன ஈர்ப்பு பேரணி நடாத்தப்பட்டது.

காந்தி பூங்காவில் இருந்து மீண்டும் மாநகரசபை வரையில் கவன ஈர்ப்பு ஊர்வலம் நடைபெற்றதுடன் மாநகரசபைக்கு முன்பாக ஒன்றுகூடிய மாநகரசபை ஊழியர்கள்,அதிகாரிகள் குற்றவாளிகளை கைதுசெய்யுமாறு கோசங்களை எழுப்பினர்.

“தன்னலமற்ற பொதுச்சேவைக்கு கிடைத்த வெகுமதி வன்முறையா?,இன்று மாநகர ஆணையாளருக்கு நாளை?,மாநகர ஆணையாளரின் வதிவிடத்தில் நடந்த அனர்த்தத்திற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்து உட்பட பல்வேறு சுலோகங்கள் தாங்கிய பதாகைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் ஏந்தியிருந்தனர்.

கடந்த 09ஆம் திகதி இரவு மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எம்.உதயகுமாரின் வீட்டில் தரித்துவைக்கப்பட்டிருந்த வாகனத்தின்மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.