News Update :
Home » » தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சிப்பதற்கு எந்த இனத்திற்கும் அருகதையில்லை –கோவிந்தன் கருணாகரம்

தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சிப்பதற்கு எந்த இனத்திற்கும் அருகதையில்லை –கோவிந்தன் கருணாகரம்

Penulis : kirishnakumar on Tuesday, April 5, 2016 | 10:14 AM

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்காக கொள்கையுடன் உறுதியுடன் அரசியல்பணியாற்றிவருகின்றது. அதனை விமர்சிப்பதற்கு இலங்கையில் உள்ள எந்த இனத்திற்கும் அருகதையில்லையென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரின் மோசாப்பிட்டி வை.எம்.ஏ.சி.விளையாட்டுக்கழகத்தின் 88வது ஆண்டு நிறைவினை முன்னிட்டும் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டும் மாபெரும் விளையாட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை(03)சிறப்பாக நடைபெற்றது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை(03) பிற்பகல் 3.00மணியளவில் பயனியர் வீதியில் உள்ள வை.எம்.ஏ.சி.விளையாட்டுக்கழக மைதானத்தில் இந்த விளையாட்டு விழா நடைபெற்றது.

வை.எம்.ஏ.சி.விளையாட்டுக்கழகத்தின் தலைவர் ஈ.வைரமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா), கோட்டைமுனை அரசடிப்பிள்ளையார் ஆலய தலைவர் செ.அமிர்தலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின்போது கௌரவ,சிறப்பு அதிதிகளும் கலந்துகொண்டதுடன் பாரம்பரிய விளையாட்டுக்களும் நடாத்தப்பட்டன.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக நலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

கடந்த ஒரு வருடமாக அச்சுறுத்தல்கள் இல்லாத ஆட்சியொன்று நடைபெற்றுவரும் வேளையில் வடகிழக்கு தமிழ் பேசும் மக்கள் தீர்வுத்திட்டம் ஒன்றை பெற்றுக்கொள்ளும் வகையில் ஏனைய கட்சிகளுடன் இணைந்துசெயற்பட்டுவரும் இந்த காலப்பகுதியில் இந்த நாட்டில் ஒரு பதற்ற சூழ்நிலையினை ஏற்படுத்தவேண்டும் வடகிழக்கில் பிரச்சினைகள் தீரக்கூடாது அந்த பிரச்சினையை வைத்து இந்த நாட்டை ஆளவேண்டும் என ஒரு கூட்டம் தற்போதும் கங்கணம்கட்டி நிற்கின்றது.

2015-01-08க்கு முன்னர் பத்து ஆண்டுகளுக்கு மேலாக காட்டாட்சினை நடாத்திவந்த பரம்பரம்பரை குழப்பத்தினை ஏற்படுத்தி மீண்டும் ஆட்சிசெய்யவேண்டும் என்ற மனநிலையுடன் செயற்பட்டுவருகின்றனர்.

தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்ந்துவரும் நிலையில் சாவகச்சேரி மறவன்புலையில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.அவை வெள்ளவத்தைக்கு கொண்டு செல்லப்படஇருந்தாக புலனாய்வுத்துறையினருக்கே தெரிவதற்கு முன்பாக முன்பிருந்த அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவருக்கு தெரியவந்துள்ளது.

தெற்கில் ஆயுதங்கள் கைப்பற்றப்படும்போது அது பதாளகோஸ்டியினர் பயன்படுத்துகின்றனர் என்கின்றார்கள்.30வருடத்திற்கு மேலாக ஆயுத மோதல்கள் நடைபெற்ற பிரதேசத்திலே பழைய ஆயுதங்களோ வெளிபொருட்களோ கைப்பற்றப்பட்டால் புலிகள் மீண்டும் வந்துவிட்டார்கள்,ஈழப்போராட்டத்தை தொடங்க போகின்றார்கள் என்ற பீதியை தெற்கில் புதைக்க முற்படுகின்றனர்.

வடகிழக்கில் ஒரு ஸ்திரத்தன்மை இருக்ககூடாது,வடகிழக்கில் சமாதான நிலையேற்படக்கூடாது,அந்த நிலைமை இருக்கும்போதே சிங்கள மக்கள் மத்தியில் ஆட்சியமைக்ககூடிய சூழ்நிலையினை உருவாக்கலாம் என்ற நிலைப்பாட்டை சிலர் இன்னும் கொண்டுள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பானது 2001ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரபாரனால் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே பாதையில் பயணிக்கவேண்டும்.தமிழ் மக்களுக்கான தீர்வினைப்பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது.

இலங்கை அரசியல் வரலாற்றில் அரசியல் கற்புநெறி தவறாத கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பதையும் தெளிவான அரசியல் செல்நெறி கொண்டவர்கள் தமிழ்மக்கள் என்பதையும் இந்த இடத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் அவர்களது ஜீவநாடியான தமிழ்மக்களையும் ஏளனத்தனமான பரிகாசங்களுடன் விமர்சிப்பவர்களுக்கு பகிரங்கமாக உரத்து உரைக்கின்றேன்.

அண்மைக்காலமாக தொடர்பு சாதனங்களிலும்,இணைய வழி செய்திகள்,முகநூல்கள் மூலம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தொடர்பாகவும் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் தொடர்பாகவும் வரும் விமர்சனங்களையும் அதற்க்கு எதிரான விமர்சனங்களையும் பார்க்கும் போது தமிழ்த் தேசியத்துக்காக ஆயுதம் ஏந்திய முன்னாள் போராளி என்ற வகையில் இனியும் மௌனமாக இருக்க முடியாது என்ற ஆதங்கத்தில்தான் இதனைக் கூறுகின்றேன்.

அதேவேளை மக்கள் பிரதிநிதிகளாகிய எம்மவர்களுக்கு இருக்கும் பொறுப்பினையும் எம்மவர்கள் உணர வேண்டும் என்பதையும் இந்த இடத்தில் கூறித்தான் ஆகவேண்டும். எம்மவர்கள் சிலர் மக்கள் கூட்டம்,மலர்மாலை,மைக் என்பவற்றைக் கண்டால் தம்நிலை மறுப்பவர்களும் உள்ளார்கள்.குறிப்பாக மதம்,இனம் தொடர்பான விமர்சனங்களின் போது உணர்வை விட அறிவுபூர்வமாக சிந்தித்து உரையாற்ற வேண்டிய பொறுப்புணர்வு இருக்கின்றது என்பதையும் உணரவேண்டும்.

ஆனாலும் அதற்காக கூட்டமைப்பையும், தமிழ்மக்களையும் கிள்ளுக்கீரையாகவும் பிச்சைகாரர்களாகவும் காட்டும் விமர்சனங்களுக்கு என் நக்கீரமுகத்தைக் காட்டாமல் இருக்க முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர இன்று நல்லாட்சியில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும்,

இன்று அமைச்சர்களாக இருக்கும் பலரும் தேர்தலுக்கு சற்று முன்னர் வரை மகிந்தவை மன்னராக முடிசூட்டி அழகுபார்த்தவர்களும் அவரையும் அவரது குடும்பத்தையும் மன்னராகவும், இளவரசர்கலாகவும் மனமகிழ்ந்து ஏற்றுக்கொண்டவர்களே!

மகிந்தவால் தேசியப்பட்டியல் பெற்று மஹிந்த புராணம் பாடி மறுமாதம் குத்துக் கரணம் அடித்த கட்சிகளும் உண்டு.நபர்களும் உண்டு.இவர்கள் மகிந்தவுடன் இருந்து ரணிலை விமர்சித்த அசிங்க வார்த்தைகளுக்கு அகராதியில் கூட அர்த்தம் இலை.ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் கூட மகிந்தவை போற்றிப் புகழ்ந்து ரணில்,மைத்திரியை விமர்சித்த இவர்கள் இன்று எமது அரசாங்கம்,

எமது ஜனாதிபதி,எமது பிரதமர் என்று மனச்சாட்சிக்கு விரோதமாக கதைக்கும்போது இவர்களது அரசியல் விபச்சாரத்திற்காக இவர்களது மதத்தையோ, இனத்தையோ விமர்சிப்பது எந்த வகையிலும் பொருத்தமற்றது என்பதையும் உணர்ந்த அரசியல் தெளிவுள்ளவன் நான்.
ஆனால் இந்த அரசியல் விபச்சாரிகளுக்கு எதிர்காலம் தக்க பாடம் புகட்டும்.ஏன் எனில் காலம் கற்றுத்தருவது மட்டுமல்ல தக்க பாடத்தையும் படிப்பிக்கும் என்பது வரலாற்று உண்மை என்பதை இந்த அரசியல் விபச்சாரகர்கள் புரிந்தால் சரி.

தமிழ் மக்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பினையும் விமர்சிப்பதற்கு வடக்கு கிழக்கில் மாத்திரம் அல்ல,இலங்கையில் உள்ள எந்த இனத்திற்கும் அருகதையில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.நாங்கள் உறுதியுடன் கொள்கையுடன் தமிழ் மக்களுக்காக அரசியல்பணியாற்றுகின்றோம்.
Share this article :

Post a Comment

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger