தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் வெருகல் படுகொலை நினைவு தினம்

2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபை மீண்டும் உருவாக்கப்பட்டதன் பின்னரே மட்டக்களப்பு மாவட்டம் அபிவிருத்தி கண்டது என கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சிரேஸ்ட பிரதி தலைவருமான நா.திரவியம்(ஜெயம்)தெரிவித்தார்.


கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு வெருகல் படுகொலையின் 12ஆவது நினைவு நிகழ்வு, மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களின் எல்லைப் பகுதியிலுள்ள கதிரவெளியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) மாலை நடைபெற்றது.

2004ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி அதிகாலைப் பொழுதில் வெருகல் ஆற்றின் மறுகரையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த சேர்ந்த சேர்ந்த 210 போராளிகள் கொல்லப்பட்டிருந்தனர்.

இதனை நினைவு கூரும் நிகழ்வு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சிரேஸ்ட பிரதி தலைவருமான நா.திரவியம்(ஜெயம்) தலைமையில் வெருகல்மலையில் நேற்று மாலை நடைபெற்றது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய திரவியம்,

கிழக்கு மாகாணம் தனித்துவமான மாகாணம்.நாங்கள் எதனைச்செய்தாலும் மக்களுக்காக செய்யவேண்டும் என்று எண்ணுபவர்கள்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க தலைவருக்கும் கருணா அம்மானுக்கும் இடையில் கருத்துமுரண்பாடுகள் ஏற்பட்டபோது ஒட்டுமொத்த கிழக்கு மாகாண தமிழ் மக்களும் பாதிக்கப்படுவதை நாம் விரும்பவில்லை.

அன்று எமது பிரதேசம் அனைத்து வளங்களையும் கொண்டதாக இருந்தது.முக்கியமாக சகோதர படுகொலையொன்று நடைபெறக்கூடாது என்பதில் உறுதியாகஇருந்தோம். எனினும் 2004ஆம்ஆண்டு சித்திரைமாதம் ஒன்பதாம் திகதி இரவு எமது போராளிகள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது.

இந்த வெருகல் படுகொலை நினைவு தினத்தை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உள்ளவரை அனுஸ்டிக்கும். அவ்வாறு செய்யமுடியாத கட்டம் ஏற்பட்டால் இதன்போது கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் விளக்கினையாவது ஏற்றிச்செல்லவேண்டும்.

2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபை மீண்டும் உருவாக்கப்பட்டதன் பின்னரே மட்டக்களப்பு மாவட்டம் அபிவிருத்தி கண்டது.வாகரை பிரதேசம் கடந்த காலங்களில் இருட்டாகவே இருந்துவந்தது.மாகாணசபை உருவாக்கப்பட்டதன் பின்னரே இப்பிரதேசமும் அபிவிருத்தி கண்டது.

வாகரை மக்களை பயன்படுத்துபவர்களுக்கு எல்லாரும் முன்வருவார்கள்.ஆனால் அவர்களின் தேவைகள் என்ன என்பது தொடர்பில் எவரும் சிந்திப்பதில்லை.
தேர்தல் காலங்களில் கூட்டம் கூட்டமாக வருவார்கள்.ஆனால் இந்த மக்களுக்கு யாரும் எதனையும் செய்யவில்லை.

ஆனால் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஒன்று உருவாக்கப்பட்டதன் பின்னரே வாகரை பிரதேசம் அபிவிருத்தி என்பதை கண்டுள்ளது.சந்திரகாந்தன் மிகவும் திட்டமிட்ட வகையில் அபிவிருத்திகளை மேற்கொண்டுவந்தார்.

2008ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட முன்வராதவர்களும் வெளிநாடுகளில் உள்ளவர்களும் வந்து இன்று தேர்தலில் போட்டியிடுகின்றார்கள் என்றால் அதற்கான சூழ்நிலையினை ஏற்படுத்தியவர்கள் இங்கு உயிரிழந்த 210போராளிகளே என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதி தலைவரான யோகவேள்,மகளிர் அணி தலைவர் திருமதி செல்வி மனோகர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.