விபத்தை ஏற்படுத்தும் வகையில் நடு வீதியில் 37 மின் கம்பங்கள்

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் நகர சபையின் பராமரிப்பின் கீழ் வரும் பல வீதிகளில் பாதையின் நடுவில் 37 மின்கம்பங்களை நிறுவி வீதிக்கு கொங்கிறீற் இடப்பட்டுள்ளதால் பயணிகளும் வாகனங்களும் பெருத்த அசௌகரியத்துக்கு உள்ளாவதாக பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கண்டிக்கப்பட்டது.

ஏறாவூர் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா ஆகியோரின் இணைத் தலைமையில் ஏறாவூர் நகர பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது அங்கு சமுகமளித்திருந்த சமூக நல ஆர்வலர்களாலும் அதிகாரிகளாலும் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த மின் கம்பங்களை இடமாற்றுவதற்கு கடந்த பல வருடங்களுக்கு முன்னரே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த போதிலும் கூட நகர சபை நிருவாகம் அவ்வேலைகளை இதுவரை முன்னெடுக்கவில்லை என்று கண்டிக்கப்பட்டது.

ஏறாவூர் நகர சபைப் பிரிவில் உள்ள பல கொங்கிறீற் வீதிகளின் நடுவில் இந்த மின் கம்பங்கள் காணப்படுகின்றன.

இருட்டு வேளையில், அவசர பயணத்தின் நிமித்தம், மற்றும் நிறைமாதக் கர்ப்பிணிகள் உட்பட அவசர நோயாளிகள்,  முச்சக்கர வண்டிகளில் பயணிப்போர் மாணவர்கள், ஆசிரியர்கள் இந்த நட்ட நடு வீதி மின்கம்பங்களில் மோதுண்டு உயிராபத்தில் சிக்க வேண்டிய ஆபத்து இருப்பதாக அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

நடு வீதியிலுள்ள இந்த மின் கம்பங்களைப் பிடுங்கி அகற்றி வீதி மருங்குகளில் பொருத்துவதற்கு ஒட்டு மொத்தமாக சுமார் 4 இலட்ச ரூபாய் செலவு தொகையை நகர சபை அங்கீகாரம் அளித்தபோதும் கடந்த பல வருடங்களாக நகர சபை நிருவாகம் இதில் கவனம் எடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டது.

இது குறித்து அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், இது மிகப் பாரதூரமான விடயம், எனவே இது குறித்து மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவர் என்கின்ற வகையில் நகரசபைச் செயலாளர் இந்த விடயத்தில் உடனடியாக செயற்பட்டு மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் திட்டமிடப்படாத அமைக்கப்பட்டுள்ள நடு வீதிகளிலுள்ள இந்த மின்கம்பங்களை அகற்ற வேண்டும் என்று பணிக்கின்றேன்.

இல்லையேல் இந்த விடயம் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டியேற்படும் என எச்சரித்தார்.