மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் பொது அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் மீனவர்களின் காணிகள் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு குத்தகைக்கு வழங்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மனித கழிவுகள் நிலையம் அமைக்கும் பணியை நிறுத்தக்கோரியும் குறித்த பகுதி மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலமீன்மடு பகுதியில் மூன்று புகழ்பூத்த ஆலயங்கள் உள்ள பகுதியில் மனித கழிவுகள் மற்றும் மனித உடலங்களை எரிக்கும் நிலையம் அமைக்கப்படுவதை உடனடியாக இடைநிறுத்துமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பாலமீன்மடு பிரதேசத்தினை சேர்ந்த பொது அமைப்புகள் மற்றும் மகளிர் அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை நடாத்தியது.

சுனாமி அனர்த்தத்திற்கு முன்னர் இப்பகுதியில் இருந்த ஐம்பது மீனவர்களின் காணிகளை சுற்றுலாவிடுதி அமைப்பதற்காக நிறுவனம் ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்க எடுக்கப்படும் நடவடிக்கையினை உடனடியாக நிறுத்துமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மீனவர்களின் வாழ்வாதார இடமாகவிருக்கும் தமது பகுதியை வேறு நபர்களுக்கு வழங்கி தமது வாழ்வாதாரத்தினை சுரண்டவேண்டாம் எனவும் இங்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டது.

எமது புண்ணிய பூமியை அசுத்தப்படுத்தாதே,மனிதக்கழிகள் எரிக்கும் கட்டிடத்தினை நிறுத்து,மீனவர்கள் குடியிருந்த காணிகளை மீள அவர்களிடமே கையளி போன்ற பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தோர் ஏந்தியிருந்தனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்,கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடினர்.

இதன்போது மாவட்ட அரசாங்க அதிபருடன் தொடர்புகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் குறித்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துக்கூறினார்.இது தொடர்பில் நடவடிக்கையெடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினரிடம் மாவட்ட அரசாங்க வழங்கிய உறுதிமொழியை அடுத்து ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.