பேரினவாதிகளே சிறுபான்மையினருக்கு தேசப்பற்றை இல்லாமல்செய்தனர் –பிரசன்னா இந்திரகுமார்

காலத்துக்குக் காலம் கோலோச்சிய பேரினவாத ஆட்சியாளர்களே சிறுபான்மையினரான தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இந்த நாடு மீதான பற்றை இல்லாமலாக்கினர் என கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஆறுமுகத்தான்குடியிருப்பில் புதன்கிழமை இடம்பெற்ற கிறிக்கெற் சுற்றுப்போட்டி நிகழ்வின்போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரும் அகில இலங்கை சமாதான நீதிவானும் காந்தி விளையாட்டுக் கழக போசகருமாகிய எஸ். நமசிவாயம் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரசன்னா இந்திரகுமார் கூறியதாவது,
பேரினவாத ஆட்சியாளர்கள் தொடர்ந்தேர்ச்சையாக வடக்கு கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த சிறுபான்மைச் சமூக விளையாட்டு வீரர்களை புறக்கணித்தே வந்திருக்கின்றார்கள்.

அதனால்தான் சிறுபான்மைச் சமூகங்களின் விளையாட்டு ரசிகர்கள் சொந்த நாட்டின் விளையாட்டு வீரர்கள்பால் தமது ஆதரவைத் தெரிவிக்காது பிறநாட்டு விளையாட்டு வீரர்களை ஆதரிக்கத் துவங்கினார்கள்.
இந்த நாட்டின் தலைமைத்துவங்கள் காலாகாலமாக சிறுபான்மையினரைப் புறக்கணித்து வந்ததன் விளைவுதான் இது.

சிறுபான்மைச் சமூகங்களின் திறமைகளையும், ஆற்றல்களையும் இனவாதக் கண்ணோட்டத்துக்கு அப்பால் பேரினவாத ஆட்சியாளர்கள் கவனித்திருப்பார்களானால் இந்த விபரீதம் ஏற்பட்டிருக்காது.

என்னுடைய சமூகமும் விளையாடுகிறது என்று சிந்திப்பதற்கு சிறுபான்மைச் சமூகங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தால் அது நாட்டுப் பற்றாக மாறியிருக்கும்.

வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து இதுவரை எந்தவொரு கிறிக்கெற் வீரரையும் சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்புக்கு பேரினவாத ஆட்சியாளர்கள் வழி செய்ததாக நான் இதுவரை அறியவில்லை.

ஆகவே நல்லாட்சி அரசாங்கம் எதிர்காலத்தில் வடக்கு கிழக்கிலே உள்ள சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த திறமையான கிறிக்கெற் மற்றும் இன்னோரன்ன விளையாட்டு வீரர்களையும் அடையாளம் கண்டு அவர்களையும் சர்வதேசப் போட்டிகளில் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
தென்னிலங்கை ஆட்சியாளர்களிடம் அப்படியான மன மாற்றங்கள் வருமாக இருந்தால் அது சிறுபான்மைச் சமூகங்கள் மத்தியில் இது எனது நாடு என்ற நாட்டுப்பற்றை உருவாக்க வழி செய்யும்.

விளையாட்டு ஐக்கியத்தை ஏற்படுத்த உதவும் என்று உண்மையாகவே கருதினால் குறைந்தபட்சம் இந்தக் கருதுகோளின் ஊடாக ஏன் இந்த நாட்டில் வாழும் பல்வேறுபட்ட சமூகங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளிடம் விளையாட்டினூடாக மகிழ்ச்சியையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்த முடியாது?
எனவே இது பற்றி நல்லாட்சியாயாளர்கள் சிந்திப்பது காலத்தின் தேவை கருதியதும் சாலச் சிறந்ததுமாகும் என்றார்.

இந்த விளையாட்டு நிகழ்வில் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரும் அகில இலங்கை சமாதான நீதிவானும் காந்தி விளையாட்டுக் கழக போசகருமாகிய எஸ். நமசிவாயம், பிரதி அதிபரும் கிராம அபிவிருத்திச் சங்க உப தலைவருமான எஸ். துளசிநாதன் உட்பட தன்னாமுனை சென்ஜோசப்;, மைலம்பாவெளி வெண்புறர், ஆறுமுகத்தான்குடியிருப்பு காந்தி ஆகிய விளையாட்டுக் கழக வீரர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.