சரத்பொன்சேகா தெரிவித்த கருத்து தொடர்பில் அரசாங்கத்தின் கருத்து என்ன?-ஜனா கேள்வி

சரத்பொன்சேகா அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில் அரசாங்கம் தனது கருத்தினை வெளிப்படுத்தவேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா)தெரிவித்தார்.
மட்டக்களப்பு மண்டூர் 13ஆம் கிராமம் கண்ணகை அம்மன் ஆலய நிர்வாகத்தினரை சந்தித்து ஆலயத் தேவைகள், கிராமத் தேவைகள், சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

பிரபாகரன் தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் நிலவும் சந்தேகத்தை சரத் பொன்சேகா தனது பாராளுமன்ற கன்னி உரையில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது மட்டுமல்ல யுத்தம் முடிவுக்கு வந்த அண்மைய நாட்களில் யுத்தக் குற்றம் நடைபெற்றது என்பதையும் உறுதிப்படுத்தியுள்ள சரத் பொன்சேகா போர்க்குற்ற விசாரணையின் போது அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த சர்வதேசததின் பங்களிபபு அவசியம் என்றும் கோரியுள்ளார்.

இவற்றை அவர், ஒரு பொதுக் கூட்டத்திலோ, மக்கள் சந்திப்பிலோ கூறவில்லை. நாட்டின் உயர் பீடமான நாடாளுமன்றத்தில் தனது கன்னி உரையில் கூறியுள்ளார்.

இதனைத்தான் நாங்கள் 2009 மே 19ஆம் திகதி தொடக்கம் கூறி வருகின்றோம். பல தடவைகள் எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலும் கூறினார்கள். அவைகளையெல்லாம் கருத்திலோ கணக்கிலோ எடுக்கவில்லை.

ஆனால், இன்றுக் கருத்தை நாடாளுமன்றத்தில் எடுத்துக் கூறியவர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது குழுக்களின் பிரதித்தவிசாளரோ, எதிர்க்கட்சித் தலைவரோ அல்ல.

யுத்தத்தை வழிநடத்திய இராணுவத்தளபதி, இராணுவ உயர் கௌரவமான பீல்ட் மார்சல் பட்டம் பெற்றவர், சிறிலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசின் நாடாளுமன்ற உறுப்பினர், இவற்றை விட நல்லாட்சி அரசின் அமைச்சரவை அந்தஸ்து பெற்ற அமைச்சரான சரத் பொன்சேகா அவர்கள் தான் கூறியுள்ளார்.

சர்வதேச பங்களிப்புடன் நடைபெறும் விசாரணை மூலம் போர்க்குற்றம் இழைத்தவர்களுக்கு உச்ச பட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் நாட்டின் உயர் சபையில் இடித்துரைத்துள்ளார். நல்லாட்சி அரசின் அமைச்சரது கூற்றுக்கும் அமைச்சரது கோரிக்கைக்கும் இந்த நல்லாட்சி அரசு கூறும் பதில் என்ன, இந்தப் பதிலை எமது நாடு மாத்திரமல்ல சர்வதேசமும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது. இதனை நல்லாட்சி அரசு உணர்ந்தால் சரி.

முன்னாள் தளபதி கூற்றுக்கு இன்றைய அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?. பேரினவாதிகளின் கூற்றுக்கு நல்லாட்சி அரசு செவிசாய்த்து முன்னாள் தளபதியின் கருத்தைப் புறந்தள்ளப் போகிறதா அல்லது தக்க நடவடிக்கை எடுக்கப் போகின்றதா. எப்படியாயினும் சரக்கு மலிந்து சந்தைக்கு வந்துவிட்டது. இதுதான் இன்றைய ஜதார்த்தம்.

காலம் கடந்தாவது, உண்மையை உயர் சபையில் உரைத்தமைக்கு பீல்டு மார்சல் சரத்பொன்சேகாவுக்கு பாராட்டுக்கள் வழங்குவது பொருத்தம்.