விசேட அதிரடிப்படையினருக்கு ஒதுக்கப்பட்ட காணியை உடனடியாக நிறுத்துமாறு யோகேஸ்வரன் எம்.பி;.கோரிக்கை

மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்குரிய காணியை விசேட அதிரடிப்படையினருக்கு வழங்குமாறு பொதுநிர்வாக அலுவல்கள் அமைச்சினால் விடுக்கப்பட்ட உத்தரவினை மீள்பரிசீலணை செய்யுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரை அமைச்சில்  சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,
களுவாஞ்சிகுடி நகரம் இன்று வளர்ச்சியடைந்துவருகின்றது.இந்த நிலையில் களுவாஞ்சிகுடி நகரில் எதிர்காலத்தில் பாரிய இடநெருக்கடி ஏற்படும் அபாயமும் இருந்துவருகின்றது.

இந்த நிலையில் களுவாஞ்சிகுடி நகரில் 1990ஆம் ஆண்டு தொடக்கம் விசேட அதிரடிப்படையினரின் முகாமாகவுள்ள மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசெயலகத்திற்கு உரிய காணியை விசேட அதிரடிப்படையினருக்கு நிரந்தரமாக வழங்குமாறு பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சேபனையினையும் செயலாளரிடம் தெரிவித்துள்ளேன்.இது பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட உத்தரவு எனவும் அதற்கு அமைவாகவே இந்த பணிப்புரையினை தாம் விடுத்தாகவும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் என்னிடம் தெரிவித்தார்.

எனினும் குறித்த அதிரடிப்படை முகாமை அப்பகுதியில் இருந்து அகற்றவேண்டும் என பிரதேச மக்கள் பல தடவைகள் எங்களிடம் கோரிக்கைகள் முன்வைத்துள்ளனர்.அந்த முகாமில் கடந்த காலத்தில் பல படுகொலைகள் நடந்துள்ளன.கடத்தல்கள் நடைபெற்றுள்ளன.எதிர்வரும் மாதத்தில் இலங்கை வரும் ஐ.நா.அதிகாரிகளை அந்த முகாமினை பார்வையிட கோரவுள்ளோம் என்பதையும் செயலாளரிடம் தெரிவித்தேன்.

குறித்த காணியை பிரதேச செயலகத்திற்கு வழங்கவேண்டிய அவசியம் தொடர்பில் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

அத்துடன் அந்த காணியில் உள்ள விசேட அதிரடிப்படை முகாமை அகற்றிவிட்டு அதனை பிரதேச செயலாளரிடம் வழங்கவேண்டும் என்ற வலிறுத்தலை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமும் விடுக்கவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.