பெண்களை புகைப்படம் எடுத்தவர் ஏறாவூரில் கைது

மட்டக்களப்பு, ஏறாவூரில்  வெள்ளிக்கிழமை ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படவிருக்கும் ஆடைத்தொழிற்சாலைக்கு முன்னால் நின்று கொண்டு அங்கு வரும் இளம்பெண்களை தனது அலைபேசியில் படமெடுத்துக் கொண்டு நின்றவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டின் முயற்சியினால் ஏறாவூரில் நிருமாணிக்க்பபட்ட பாரிய ஆடைத் தொழிற்சாலை ஜனாதிபதியினால் வெள்ளிக்கிழமை மாலை திறந்து வைக்கப்படவிருக்கின்றது.

இந்த ஆடைத் தொழிற்சாலைக்கு முன்னால் வியாழக்கிழமை பொழுது புலரும்போதே வந்து நின்று கொண்டு அங்கு பணிபுரிவதற்காகவும் ஆடைத் தொழிற்சாலைத் திறப்பு விழா ஏற்பாடுகளுக்காகவும் பணிக்கு வந்து கொண்டிருந்த இளம் பெண்களை தனது அலைபேசியில் ஒருவர் படமெடுத்துக் கொண்டு  நின்றிருக்கின்றார்.

இதனை உன்னிப்பாக அவதானித்த, அங்கு ஜனாதிபதி வருவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக ஏற்கெனவே அங்கு பாதுகாப்புக் கடமையில் உத்தியோகத்தர்கள் உடனடியாக சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

அவரது அலைபேசியைப் பரிசோதித்த போது பல்வேறு கோணங்களில் பெண்கள் படம்பிடிக்கப்பட்டிருப்பதாகவும், அதில் நீல மற்றும் நிர்வாணப்படங்களும் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் மட்டக்களப்பு ஆரையம்பதியைச் சேர்ந்தவர் என்று ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர் என்ன பின்னணியோடு இந்தச் செயலில் ஈடுபட்டார் என்று பொலிஸார் பல்வேறு கோணங்களில் இச்சம்பவம் குறித்த தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.