மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

2016-03-31க்கும் முன்னர் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாததை கண்டித்தும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்ககோரியும் இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மதகுருமார்,ஆசிரியர் சங்க பிரதிநிதிகள்,தொழிற்சங்க பிரதிநிதிகள் ,பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வேலையற்ற பட்டதாரிகளும் கலந்துகொண்டனர்.

அகில இலங்கை வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஊடாக பிரதமர் ம்றறும் அமைச்சர்களுடன் வேலைவாய்ப்பு தொடர்பாக பல்வேறு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.அதன்போது தொழில்வழங்கப்படுவதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன.அதனை விரைவுபடுத்து தொழில்களை வேலையற்ற பட்டதாரிகளுக்கு வழங்க நடவடிக்கையெடுக்குமாறும் இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதன்போது கொழும்பில் நடைபெற்ற வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டங்களின்போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் 06ஆம் திகதிக்கு முன்பாக தமது கோரிக்கைகளுக்கு சாதகமான பதில்கள் வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் கொழும்பில் மாபெரும் ஆர்ப்பட்ட பேரணி நடாத்தப்போவதாகவும் அகில இலங்கை வேலையற்ற பட்டதாரிகள் சங்க உறுப்பினர்கள் இங்கு தெரிவித்தனர்.