யாப்பு சீர்திருத்தம் என்பது மக்களிடம் இருந்து அரசாங்கம் தப்பித்துக்கொள்ளும் நடவடிக்கை –பொன்.செல்வராசா முன்னாள் எம்.பி.

(இ.சுதாகரன்)

மக்களிடம் கருத்தினைப் பெற்று யாப்பினை சீர் திருத்த நினைப்பது மக்களிடமிருந்து அரசாங்கம் தப்பித்துக் கொள்ள நினைக்கின்றமை வெளிப்படையாகத் தெரிகிறது.அரசியலில் தமிழர்களுக்கு எதுவும் கிடைக்க வில்லை அரசாங்கம் யாப்பினை திருத்துமா அல்லது மாற்றுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

மட்டக்களப்பு,பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் நேற்று சனிக்கிழமை வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.பேரின்பராசா தலைமையில் நடைபெற்ற வருடாந்த மெய்வல்லுனர் இல்ல விளையாட்டு போடடி நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

1978 ஆம் ஆண்டு அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்ட அரசியல் யாப்பு சீர்திருத்தத்தில் மக்களிடம் கருத்து பெறப்பட்டிருந்தால் 13 ஆவது அரசியல் யாப்பு சீர் திருச்தச் சட்டம் அமுலாக்கப்பட்டிருக்குமா?சற்று சிந்திக்க வேண்டும். அதனை தெற்கில் இருக்கும் சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு எதனையும் கொடுக்க விரும்ப மாட்டார்கள்.

தமிழர்களுக்கு ஓரளவு சேவை செய்து கொண்டிருக்கின்ற மாகாண சபை கிடைத்திருக்காது மக்களிடம் கருத்தினைப் பெற்று யாப்பினை சீர் திருத்த நினைப்பது மக்களிடமிருந்து அரசாங்கம் தப்பித்துக் கொள்ள நினைக்கின்றமை வெளிப்படையாகத் தெரிகிறது.

அரசியலில் தமிழர்களுக்கு எதுவும் கிடைக்க வில்லை அரசாங்கம் யாப்பினை திருத்துமா அல்லது மாற்றுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

ஜனாதிபதி அண்மையில் கூறியிருக்கின்றார் அரசியல் யாப்பில் சீர் திருத்தம் நடைபெற வேண்டுமானால் மக்களின் கருத்துக்கு அமைவாகவே யாப்பினை மாற்றியமைக்க முடியுமென இதனை தெற்கில் உள்ள சிங்கள மக்கள் ஏற்றுக் கொண்டு தமிழர்களுக்கு சாதகமாக எதனையும் கொடுக்க விரும்ப மாட்டார்கள் எது எப்படி இருப்பினும் அன்று மக்களின் கருத்துக்கு அமைவாக யாப்பு சீர் திருத்தம் நிகழ்ந்திருக்குமாயின் தமிழர்களுக்கு மாகாண சபை கிடைத்திருக்கவும் முடியாது அமைச்சரும் உருவாகி இருக்க முடியாது.

இப்பாடசாலையானது 1978 ஆம் ஆண்டு காலப் பகுதியில் அப்போதைய பட்டிருப்புத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகத் திகழ்ந்த கணேசலிங்கம் அவர்களின் சிந்தனையில் கொட்டிலில் ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலை சுனாமி அனர்த்தத்தின் பின்னர் பிரமாண்டமான கட்டிட வசதிகளுடன் வளர்ச்சி பெற்றுள்ளமை மகிழ்ச்சியாக உள்ளது.

முன்னர் இப்பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பாக பல வாக்குறுதிகளை வழங்கிய போதிலும் பெரிதாக எதனையும் செய்ய வில்லை தற்போதும் செய்ய முடியாத நிலையில் உள்ளேன்.இருப்பினும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் சில வேலைகளை எதிர் காலத்தில் செய்வேன்.அதற்கு கிராம மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும் எனத்தெரிவித்தார்.