வரலாற்று சிறப்புமிக்க கல்லடி,வேலூர் பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம் -பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

வரலாற்று சிறப்புமிக்கதும் அற்புதங்கள் நிறைந்ததுமான மட்டக்களப்பு,கல்லடி வேலூர் பத்திரகாளியம்மன் ஆலயத்தின் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ சிறப்பாக நடைபெற்றது.
மீன்பாடும் தேன்நாடு என்றழைக்கப்படும் வங்கக் கடலும் வாவியும் சூழ் சங்கத் தமிழும் சைவமும் வளர் மட்டு. மாநகரின் கிழக்கே வங்கக் கடலிற்கு முகம் காட்டி கல்லடி வேலூரில் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம் தொன்றுதொட்ட வரலாற்று சிறப்புடன் அமையப்பெற்றது.

தன்னை தேடி வருவோர்க்கு கேட்கும் வரங்களை வாரி வாரி வழங்கிக்கொண்டிரிக்கும் இவ்வாலயத்தின் கருவறை மூல மூர்த்தியாக பத்திரகாளியம்மன் விளங்குகின்றாள்.

அன்னை ஸ்ரீ பத்திரகாளியம்பாளின் வருடாந்த உற்சவமானது கடந்த  16.03.2016 புதன்கிழமை ஆலய பிரதம குரு நா.வை.பொன்னையா அவர்களினால் திருக்கும்பம் வைத்தலுடன்  ஆரம்பமாகியது.

தொடர்ந்து ஐந்து தினங்கள் பகல் (உச்ச கால பூசை), இரவு (அர்த்த ஜாம பூசை) ஆகிய  விஷேட பூசை வழிபாடுகள்  இடம்பெற்று காலை விநாயகர் பானை வலம்வருதல், அதனைத் தொடர்ந்து தீ மூட்டுதல் இடம்பெற்று , அதனைத் தொடர்ந்து  மாலை ஆறு மணிக்கு தேவாதிகள் மற்றும்  தீ மிதிப்பில் ஈடுபடும் அடியார்கள் அனைவரும்  மஞ்சள் பூசி வங்கக் கடலில்  நீராடி அதனைத் தொடர்ந்து  தீமிதித்தலுடன் வருடாந்த உற்சவம் இனிதே நிறைவுபெற்றது.

இந்த தீமதிப்பு உற்சவத்தில் நாடெங்கிலும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.