மட்டக்களப்பு மாவட்டத்தில் வழிப்பறி கொள்ளைகள் அதிகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வீதியில் செல்லும் பெண்களிடம் வழிப்பறிக்கொள்ளைச்சம்பவங்கள் அதிகரித்துவருவதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை பகல் 2.00 மணியளவில் மட்டக்களப்பு கல்லடி பிள்ளையார் கோவில் வீதியில் நடந்து வந்துகொண்டிருந்த வயோதிப பெண்ணை குறித்த வீதியால் உந்துருளியில் வந்துகொண்டிருந்த இருவர்  தாக்கிவிட்டு அவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்;றுவிட்டதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற வீதி திருக்கோவில்-01 எனும் முகவரியில் வசிக்கும் திருமதி அ.தவமணி (74) என்ற மூதாட்டி கடந்த 03.03.2016ம் திகதி பி.பகல. 2.00 மணியளவில் கல்லடியில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்கு பிள்ளையார் கோவில் வீதியால் நடந்து வரும்போது குறித்த வீதியால் உந்துருளியில் வந்துகொண்டிருந்த இருவர்  குறித்த மூதாட்டியைத் தாக்கிவிட்டு அவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்;று தப்பிச் சென்றுள்ளனர் சம்பவத்தை உற்று நோக்கிய சிலர் திருடர்களைத் துரத்திக்கொண்டு சென்றவேளை அவர்கள் வேகமாக சென்று தப்பிவிட்டனர் மேலும் அவர்கள் வந்த உந்துருளியின் வாகன இலக்கத்தினை மறைத்தவாறே அவர்கள் தப்பிச் சென்றதாக அவர்களைத் துரத்திச் சென்றவர்கள் தெரிவிக்கின்றனர்.

கட்டடங்கள் திணைக்களம், அரசாங்க அதிபரின் சுற்றுலா விடுதி, ஆயள்வேத வைத்தியசாலை, கிறீன் காடன் விடுதி என பல அலுவலகங்கள் அமைந்துள்ள மக்கள் எப்போதுமே பரபரப்பாக நடமாடுகின்ற குறித்த வீதியில் பகல்வேளை இடம்பெற்ற குறித்த திருட்டுச் சம்பவமானது மக்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்று கடந்த வாரம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பகுதியில் வீதியில் சென்றுகொண்டிருந்த பெண்னொருவரின் மூன்றரைப்பவுன் தங்க மாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் பறித்துச்செல்லப்பட்டுள்ளது.

இவை தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவரும் நிலையிலும் இதுவரையிலும் யாரும் கைதுசெய்யப்படவில்லை.