மட்டக்களப்பு மாவட்டம் போசாக்கிலும் கல்வி அறிவிலும் குறைந்த மாவட்டமாக காணப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்

(லியோ)


2015 ஆம் ஆண்டு  தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மட்டக்களப்பு , திருகோணமலை , பொலன்னறுவை ஆகிய மாவட்டத்தின்   மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது . 


கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  ஒன்றியத்தின்   தலைவர் கலாநிதி .எஸ் .எல். மன்சூர் தலைமையில் 2015 ஆம் ஆண்டு  தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மட்டக்களப்பு , திருகோணமலை , பொலன்னறுவை ஆகிய மூன்று மாவட்டத்தின்  பாடசாலை  மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்  புலமைத்தாரகை சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வும்  இன்று மட்டக்களப்பு காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது .

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் .பி .எஸ் .எம் .சார்ள்ஸ், கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர்  .எம் .உதயகுமார் , மட்டக்களப்பு போதனா வைத்தசாலை உளநல வைத்திய நிபுணர் வைத்தியர் கடம்பநாதன் , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சை நிபுணர் தம்பாவிட்ட, மட்டக்களப்பு மாவட்ட சென்ட் ஜோன்ஸ் எம்புலன்ஸ் தலைவர் . எ .எல் . எம் . மீரா சாய்பு, மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பின் தலைவர் . எஸ் . மாமாங்கராஜா  மற்றும் மட்டக்களப்பு, திருகோணமலை , பொலன்னறுவை ஆகிய மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டு  தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பாடசாலை மாணவர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் ஆகியோர் கலந்துகொண்டனர் .

2015 ஆம் ஆண்டு  தரம் ஐந்து  புலமைப்பரிசில்  பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில்    மட்டக்களப்பு மாவட்டத்தில் 707 மாணவர்களும் ,திருகோணமலை மாவட்டத்தில் 124 மாணவர்களும் , பொலன்னறுவை மாவட்டத்தில் 35 மாணவர்களும்  மொத்தமாக மூன்று மாவட்டங்களில் இருந்து வருகை தந்து கலந்துகொண்ட   866   மாணவர்களுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு விருதுகளும் ,சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கப்பட்டடு கௌரவிக்கப்பட்டனர்  .

இதேவேளை இவர்களுக்கு  கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் . 

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிக்கையில் பாடசாலை மாணவர்களாகிய சிறுவர்கள் தங்களுடைய புலமைகளின் ஊடாக அவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக அவர்கள் அடியெடுத்து வைக்கின்ற இந்த நிகழ்வில் கலந்துகொள்வதில் மகிழ்சி அடைவதாகவும் தற்போதைய இந்த சமூகத்திலே நடைபெற்று வருகின்ற சமூக பிரச்சினைகள் அதனோடு இணைந்து மாறிவருகின்ற சூழலியல் சம்பந்தமான பிரச்சினைகள் , இந்த நாட்டிலே எதிர் நோக்குகின்ற பொருளாதார பிரச்சினைகள் , சர்வதேச ரீதியாக ஏற்படுகின்ற மனித உரிமைகள் சம்பந்தமான பிரச்சினைகள் இவைகளுக்கெல்லாம் இளைய சமூதாயம் வழிநடத்தப்பட வேண்டும் என்பதிலே அரசும் அதனோடு இணைந்த நிறுவனங்களும் சவாலாக செயல்பட வேண்டிய காலமாக இருக்கின்றது .

தற்போது அரச சட்ட அறிக்கையாக பொலித்தின் பாவனையினை தடை செய்திருக்கின்றது .

இருந்த போதிலும் இந்த மாவட்டத்திலே பல இடங்களிலே பொலித்தின் வீசி எறியப்படுகின்றது , இதனை சுத்தம்  செய்வதற்காக இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி திணைக்களங்களுக்கும் பணிக்கப்பட்டுள்ளது .  

இதை விட இந்த மாவட்டத்திலே டெங்கு தொற்றுக்கு உள்ளான நிலையில் இருக்கின்ற வயதெல்லையை பார்க்கும் போது பாடசாலை மாணவர்கள் தான் டெங்கு தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றார்கள் .

டெங்கு தொற்று ஏற்படுகின்ற அபாயகரமான சூழலிலே இருக்கின்ற கட்டிடங்களை ஆய்வு செய்த போது பாடசாலை கட்டிடங்கள் தான் முன்னனியில் இருக்கின்றன .

எனவே இந்த புலமைப்பரிசில் பரீட்சை என்பது மாணவர்களின் நுண்ணறிவையும், கிரகித்தளையும் பரிசோதிப்பது அல்ல இவர்கள் வாழ்கின்ற சூழலையும் சூழலை  பற்றிய அறிவையும் பரிசோதிக்கின்ற விடயமாக இந்த புலமைப்பரிசில் பரீட்சை வடிவமைக்கப்பட்டிருகின்றது .

இந்த சூழலின் ஊடாக இந்த மாணவ சமுதாயம் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் , அவர்களுடைய ஆரோக்கிய தேக நலம் சம்பந்தமாக ஏற்படுகின்ற பிரச்சினைகள் என்பவற்றை உணர கூடிய வகையிலே இந்த மாணவ சமுதாயம் மாற்றப்பட வேண்டும் .

பாடசாலைகளிலே நடத்தப்படுகின்ற சிற்றுண்டி சாலைகள் தரம் சம்பந்தமாக ஒரு ஐயமும் வினாவும் தற்போது நிலவுகின்றது .

பாடசாலை செல்கின்ற மாணவர்கள் உட்கொள்கின்ற உணவு சம்பந்தமான கேள்விக்குறிகளும் அனைவரினது மத்தியிலும் இருக்கின்றது .

மட்டக்களப்பு மாவட்டம் பாடசாலை மாணவர்கள் உட்பட அனைவருடைய போசாக்கு இன்மை குறைவாக காணப்படுகின்ற மாவட்டமாகவும் , இலங்கையிலே கல்வி அறிவிலே 67 வீதம் கல்வி அறிவை கொண்டு குறைந்த கல்வி அறிவை கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு காணப்படுகின்றது .

 எனவே இந்த பிரச்சினைக்கெல்லாம் தீர்வு இந்த பாடசாலைகளுடன் இணைந்து இருக்கின்ற ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கரங்களிலே இருப்பதாக தெரிவித்தார் .