கிழக்கில் சுற்றுலாதுறையை விருத்திசெய்தால் 10ஆயிரம் பேர் தொழில்பெறமுடியும் -கி.ப.உபவேந்தர்

சுற்றுலாத்துறையை அதன் நேர்த்தியான தொழினுட்பங்களுடன் விருத்தி செய்தால் கிழக்கில் 10 ஆயிரம் இளைஞர் யுவதிகளுக்கு உடனடியாக நல்ல வருமானத்துடன் கூடிய நேரடி வேலைவாய்ப்பை வழங்க முடியும் என கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி ரீ. ஜயசிங்கம் தெரிவித்தார்.

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத்துறையில் தொழில் வாய்ப்புக்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்தரங்கு கிழக்குப் பல்கலைக் கழக நல்லையா மண்டபத்தில் புதன்கிழமை இடம்பெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருதார விவகாரங்கள் அமைச்சின் இலங்கைத் தேசிய மனித வள அபிவிருத்திச் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கில் கிழக்குப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சுமார் 400 மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய உபவேந்தர் மேலும் கூறியதாவது, போருக்குப் பின்னரான கிழக்கு மாகாணத்தில் உள்ள வளங்களை நுட்பமாகவும் வினைத்திறனுள்ளதாகவும் பயன்படுத்தினால் இந்த மாகாணத்தினது மட்டுமல்ல முழு நாட்டினதும் அபிவிருத்திக்கு இந்த சுற்றுலாத்துறை பெரும் பங்களிப்பைச் செய்ய முடியும்.

சுற்றுலாத்துறையை விருத்தி செய்வதன் மூலம் உடனடியாக 10 ஆயிரம் இளைஞர் யுவதிகள் நேரடியாகவும் அதேபோன்ற எண்ணிக்கையிலான குடும்பங்கள் மறைமுகமாகவும் தங்களது வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும்.

சுற்றுலாவில் இங்கு வரும் உல்லாசப் பயணிகள் வெறுமனே இங்குள்ள கட்டிடங்களையும் நிலப்பரப்பையும் கடல் காடு மேடுகளையும் கண்டு ரசிக்க வருவதில்லை.

அவர்கள் கல்வி, விவசாயம், பொருளாதாரம், மருத்துவம், கலைகலாச்சாரம் போன்ற பல்வேறு துறைகளில் அறிவோடும் அக்கறையோடும் பிரசன்னமாவதோடு அவற்றைப் பகிர்ந்த கொள்ளவும் அனுபவப்படவும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

அந்தத் துறைகளில் அவர்கள் பங்களிப்புச் செய்யவும் தயாராக இருக்கின்றார்கள். இவ்வாறுதான் தற்போதுள்ள சுற்றுலாத்துறை புதிய வடிவம் எடுத்திருக்கிறது. எனவே இந்த அரிய வாய்ப்பபை கிழக்கு மாகாணம் நன்கு பயன்படுத்தி அபிவிருத்திப் பாதையில் பயணிக்க வேண்டும்.

ஆனால், கவலையளிக்கும் விடயமாக கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையோடு சம்பந்தப்பட்ட வல்லுநர்களும் அறிவும் குறைவாகக் காணப்படுகின்றது. என்வே உடனடியாக நாம் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

க.பொ.த நாதாரண தரம் கற்றவர்களிலிருந்து பட்டதாரிக் கற்கையை முடித்தவர்கள் வரை இந்த சுற்றுலாத்துறை வாய்ப்பைப் பயன்படுத்தி முன்னேற முயற்சிக்க வேண்டும். இதற்கு கிழக்குப் பல்கலைக் கழக சமூக அபிவிருத்தியில் பய்களிப்புச் செய்ய என்றும் தயாராக இருக்கின்றது.
இந்நிகழ்வில், சுற்றுலா உற்பத்தி வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம். ஜவ்பர், உப செயலாளர் ஏ. இக்பால்,  தேசிய மனிதவள அபிவிருத்திச் சபையின் பிரதிப் பணிப்பாளர் தணிகசீலன் உட்பட இன்னும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.