எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் இல்லை –எரிபொருள் நிலையத்தினை முற்றுகையிட்டு களுவாஞ்சிகுடியில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான களுவாஞ்சிகுடி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அடிக்கடி ஏற்படும் எரிபொருள் தட்டுப்பாட்டை கண்டித்தும் முறையான பணியை மேற்கொள்ளுமாறு கோரியும் எரிபொருள் நிலையத்தினை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் மற்றும் மண்ணெண்ணை என்பன இல்லை என விளம்பரப் பலகை இடுவதனால், மிகத் தூர இடங்களிலிருந்து வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி நகரிலிருக்கும் ஒரே ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் இதுமாத்திரம்தான், மக்களுக்கு சேவை வழங்குவதில் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பங்கு அளப்பெரியது.

எரிபொருள் நிரப்பு நிலையத்தை நடத்துபவர், பெற்றோல் இல்லை என்ற பதாகையையை வைத்து விட்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தை மூடிவிட்டு செல்கின்றனர். இது ஏமாற்றும் வேலையாகும் என்று தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த பகுதியில் எரிபொருள் பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டால் அவற்றினை பெற்றுக்கொள்வதற்கு 16 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள தாழங்குடாவுக்கு செல்லவேண்டிய நிலையேற்படுவதாக பிரதேச மக்கள் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக குறித்த பகுதியில் முச்சக்கர வண்டி சேவை வழங்குபவர்கள்,வர்த்தகர்கள்,பொதுமக்கள் என பலரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறித்த எரிபொருள் நிலையம் சிறந்த முறையில் நடாத்தப்படவில்லையாயின் அந்த உரிமத்தை இடைநிறுத்து அதனை வேறு ஒருவருக்கு வழங்கவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார், ஆர்ப்பாட்டக்காரர்களுடனும்; எரிபொருள் நிரப்பு ஊழியர்களுடனும் நடாத்திய பேச்சுவார்த்தையினை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்துசென்றனர்.