தீர்வுத்திட்டத்தினை குழப்பும் வகையில் தமிழ் தலைமைகள் செயற்படக்கூடாது-கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்

பல்வேறு இழப்புகளுக்கு மத்தியில் தமிழ் மக்களுக்கு தீர்வுத்திட்டம் ஒன்றை வழங்க சிங்கள பெரும்பான்மை சமூகம் தயாராகிவரும் நிலையில் அவற்றினை குழப்பும் வகையில் தமிழ் தலைவர்கள் செயற்படக்கூடாது என கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆதரவாளர்களுடனான விசேட சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றி அவர்,

தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று தமிழ் மக்களின் பலமாக திகழ்கின்றது.நாங்கள் ஒன்று திரண்டு அதனை பலப்படுத்தவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.தமிழ் தேசிய கூட்டமைப்பில் குறைபாடுகள் இல்லையென்று நான்கூறமுற்படவில்லை.அவற்றினை சீர்செய்துகொண்டு நாங்கள் முன்னேறவேண்டிய கட்டாய சூழ்நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் கடந்த காலங்களில் பல இழப்புகளை எதிர்கொண்ட சமூகம்.அதன்காரணமாக நாங்கள் இன்று பெரும் பின்னடைவுகளை எதிர்கொண்டுள்ளோம்.அவற்றில் இருந்து மீளவேண்டிய கட்டாயம் எமக்குள்ளது.

எமது எதிர்கால சந்ததிகள் பற்றி நாங்கள் சிந்திக்கவேண்டும்.எமது நிலங்களை பாதுகாப்பது பற்றி சிந்திக்கவேண்டும்.எமது பொருளாதாரம் பற்றி சிந்திக்கவேண்டும்.ஆனால் இன்று சிலர் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பில் நாங்கள் பாரிய சந்தேகங்களைக்கொண்டுள்ளோம்.

எமது உரிமைகளைபெற்றுக்கொள்வதற்காக இலட்சக்கணக்கானோர் தமது உயிரை தியாகம் செய்துள்ளனர்.அவர்களின் ஆத்மாக்களுக்கு நாங்கள் பதில்சொல்லவேண்டிய நிலையில் உள்ளோம்.நாங்கள் ஒரு தீர்வுத்திட்டத்தை எமது மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவேண்டும்.அதற்கான சூழ்நிலை இன்று சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டுவருகின்றது.தமிழ் மக்களுக்கு தீர்வினை வழங்கவேண்டும் என்பதற்கான நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுத்துவருகின்றனர்.இந்த நிலையில் அவற்றினை குழப்பி தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்காத நிலைமையினை தமிழ் தலைமைகள் ஏற்படுத்தக்கூடாது.

நாங்கள் இன்று பலமான நிலையை அடைவதற்கு மிகமுக்கிய காரணமாக இருப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பாகும்.இன்று சர்வதேசம் கூட தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கலந்துரையாடி தீர்வினை வழங்குமாறு கூறிவருகின்றது.இந்த நிலையில் அதனை நாங்கள் பலவீனப்படுத்த அனுமதிக்கமுடியாது.

வடகிழக்கு இணைந்த மாநிலத்தில் நாங்கள் ஒன்றுபட்டுவாழ்வதற்கான சூழ்நிலையினை அனைவரும் புரிந்துகொள்வார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்.மக்களும் அதனையே எதிர்பார்ப்பார்கள் என்று நம்புகின்றேன்.