மட்டக்களப்பு கறுவப்பங்கேணி விபுலானந்தா கல்லூரியில் துஸ்பிரயோகம் -பெற்றோர் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கறுவப்பங்கேணி விபுலானந்தா வித்தியாலயத்தில் மாணவி ஒருவர் ஆசிரியரினால் துஸ்பிரயோகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்ககோரியும் பொதுமக்கள் பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பாடசாலையில் கற்கும் மாணவி ஒருவர் அங்கு கற்பிக்கும் ஆசிரியரினால் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் குறித்த ஆசிரியருக்கும் அதிபருக்கும் எதிராக நடவடிக்கையெடுக்ககோரியே இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.

இதன்போது ஸ்தலத்திற்கு விரைந்த மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெட்டியாராட்சி தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையினை மேற்கொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு கல்வி வலயத்தின் சார்பில் மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ரி.சுகுமாரனும் ஸ்தலத்துக்கு வருகைதந்து ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.

பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்பிவிட்டு ஆசிரிர்கள் அவர்களை பாதுகாப்பார்கள் என்று தாங்கள் நிம்மதியாக இருந்துவரும் நிலையில் இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக பெற்றோர் தமது பிள்ளைகள் தொடர்பில் அச்சநிலையில் உள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

குறித்த ஆசிரியருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என தெரிவித்த பெற்றோர் அதற்கு உடந்தையாக அதிபரும் உள்ளதாகவும் அவருக்கு எதிராகவும் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

குறித்த இருவரையும் எந்த பாடசாலையிலும் கடமையாற்றாதவாறு நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ரி.சுகுமாரன்,

இது தொடர்பில் உடனடியான விசாரணை நடாத்தப்படும் எனவும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.இதேபோன்று குறித்த ஆசிரியர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு பாரபட்சமின்றி நடவடிக்கையெடுக்கப்படும் என மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெட்டியாராட்சி உறுதியளித்தார்.

அதனைத்தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக பிரதெச மக்கள் தெரிவித்தனர்.