இணக்கசபையினால் 660 பிரச்சினைகளுக்கு கடந்த வருடத்தில் தீர்வு

மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலக நிருவாக எல்லைக்குட்பட்ட மத்தியஸ்த சபை மூலம் கடந்த 2015 ஆம் ஆண்டு 660 பிரச்சினைகளுக்கு இணக்கம் காணப்பட்டதாக ஏறாவூர்ப் பற்று இணக்க சபையின் தலைவர் முத்துப்பிள்ளை சசிதரன் தெரிவித்தார்.


தகராறுகளின் போது பொதுமக்களுக்கு ஏற்படும் மன உளைச்சல், நேர விரயம், பணச் செலவுகள், பயண நெருக்கடிகள், உற்பத்திப் பின்னடைவு என்பவை தமது மத்தியஸ்த சபை மூலம் முடிந்தளவு குறைக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மத்தியஸ்த சபையின் செயற்பாடுகள் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

2015 ஆம் ஆண்டு பொலிஸ் நிலையங்கள் மூலமும் நீதிமன்றங்கள் மூலமும் தம்மிடம் சமர்ப்பிக்கப்பட்ட 858 பிரச்சினைகளில் 660 முரண்பாடுகளுக்கு சமரசம் காணப்பட்டுள்ளது. 198 பிரச்சினைகள் இணக்கம் எட்டப்படாமல் நிலுவையில் உள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பரந்த பிரதேச செயலகப் பிரிவான ஏறாவூர்ப் பற்றில் ஏறாவூர் மற்றும் கரடியனாறு ஆகிய இரண்டு பொலிஸ் நிருவாகப் பிரிவுகளை உள்ளடக்கியதாக தமது மத்தியஸ்த சபை செயற்பட்டு வருகின்றது.

அதன்படி ஏறாவூர் பொலிஸில் இருந்து தமது மத்தியஸ்த சபைக்கு கடந்த ஆண்டு 303 பிரச்சினைகள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவற்றில் 225 பிணக்குகளுக்கு சமரசம் எட்டப்பட்;டதாகவும் மேலும் 78 பிணக்குகள் இணக்கம் காணப்படாமல் நிலுவையிலுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கரடியனாறு பொலிஸ் நிலையத்தினூடாக தமது மத்தியஸ்த சபைக்குப் பாரப்படுத்தப்பட்ட 32 பிணக்குகளில் 30 பிரச்சினைகளுக்கு இணக்கம் காணப்பட்டதாகவும் 2 பிரச்சினைகள் நிலுலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, நீதிமன்றங்களினூடாக மத்தியஸ்த சபைக்கு பாரப்படுத்தப்பட்ட 116 பிணக்குகளில் 112 இற்கு சமரசம் காணப்பட்டதாகவும் 4 பிணக்குகள் நிலுவையிலுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏறாவூர்ப் பற்று மத்தியஸ்த சபையின் தலைவராக முத்துப்பிள்ளை சசிதரன் கடமையாற்றுகின்ற அதேவேளை, உப தலைவராக தங்கேஸ்வரி பஞ்சாட்சரத்துடன் மத்தியஸ்தர்கள் குழாமில் மேலும் 05 பெண்கள் உட்பட 21 பேர் கடமையாற்றுகின்றனர்.