பொதுமக்களின் வரி பணத்தில் சம்பளம் பெறும் உத்தியோகத்தர் பொறுப்பு கூறவேண்டியவர்கள் -மட்டு.மாநகர ஆணையாளர்

அரசாங்க உத்தியோகத்தர்கள் சம்பளப்பணத்தினை பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து பெறுகின்றோம்.அதன்காரணமாக பொதுமக்களுக்கு பொறுப்புக்கூறவேண்டியவர்களாகவுள்ளோம் என மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

சர்வதேச ஊழல் ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு ஊழல் அற்ற மக்கள் சேவையை வழங்கும் என்னும் தலைப்பில் அரச அலுவலகங்களில் அரச அலுவலகர்கள் உறுதிமொழியளிக்கும் நிகழ்வு   புதன்கிழமை  நாடுபூராகவும் நடைபெற்றது.

அதனடிப்படையில் காலை 9.00மணிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச அலுவலகங்களிலும் ஊழலுக்கு எதிராக உறுதிமொழியளிக்கப்பட்டது.

இது தொடர்பான நிகழ்வு நேற்றையதினம் மட்டக்களப்பு மாநகர சபை முன்றலில் நடைபெற்றது. இந்நிகழ்வானது மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு அதன் பின்னர் பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன் அவர்களினால் உறுதிமொழி வாசிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளரினால் ஊழல் எதிர்ப்பு தொடர்பான பிரதான உரை நிகழ்த்தப்பட்டது.

இங்கு உரையாற்றிய மாநகர ஆணையாளர் மேலும் தெரிவித்தாவது,
இலங்கையின் அரசாங்க சேவையில் மிகவும் பிரதானமான இரண்டு குற்றச்சாட்டுகள் பொதுமக்களால் முன்வைக்கப்படுகின்றன.வேலையில் தாமத்தினை மேற்கொள்வது மற்றையது ஊழல்.இந்த இரண்டு குற்றச்சாட்டுகளும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் இரண்டு பிரதான குற்றச்சாட்டாகும்.

இலஞ்சம் பெறுதல் மற்றும் காலதாமதம் செய்தல் ஊடாக சில அரசாங்க உத்தியோகத்தர்கள் அரச கடமையின் மகிமையை குறைப்பதன் காரணமாக அரச ஊழியர்களுக்கு அபகீர்த்தி ஏற்படுவதே கடந்த கால அனுபவமாக உள்ளது.

இவ்வாறு ஊழலும் காலதாமமும் செய்கின்ற சில உத்தியோகத்தர்களால் அரசாங்க Nசுவையின் புகழ்வடைந்துசெல்கின்றது.நாங்கள் கடமையாற்றும் உத்தியோகத்திற்கு அபகீர்த்தி ஏற்பட செயற்படமாட்டோம் என உறுதிமொழி எடுத்த பின்னரே நாங்கள் அரச உத்தியோகத்திற்குள் நுழைகின்றோம்.

ஆனால் அரச உத்தியோகத்திற்குள் நுழையும் சிலர் பொதுமக்களை அடிமைகளாகவும் தங்களை எஜமானர்களாகவும் நினைத்து நடக்கின்றனர்.இதுவே காலணித்து ஆட்சிக்காலத்தில் அரசாங்கத்தின் நடைமுறையாக இருந்தது.

அதற்கு பின்னரான காலப்பகுதியில் அரச துறையில் இவ்வாறான நிலைமையினை மாற்றுவதற்காக காலத்துக்கு காலம் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன.

புதிய நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் அரசாங்கம் அரசாங்க உத்தியோகத்தர்களை சரியான வகையில் வழிநடாத்துவதற்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.அதில் பிரதானமாகவுள்ளது ஊழல்களை ஒழிப்பதாகும்.

நல்லாட்சி என்பது வெளிப்படைத்தன்மையும் ஊழல் அற்றதும் நேர்மையானதுமான ஆட்சியையே நல்லாட்சி என்று வரையறுத்து கூறப்படுகின்றது.அந்த அடிப்படையில் புதிய அரசாங்கத்தினால் பல சுற்றுநிருபங்கள் அனுப்பப்பட்டுள்ளன.அதில் ஒன்று பொதுமக்களின் தேவைகளை உடனடியாக பூர்த்திசெய்துவழங்கவேண்டும் என கோரப்பட்டுள்ளது.

அத்துடன் 2016 வரவுசெலவுத்திட்டத்தின் கீழ் அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கடிதங்களுக்கு ஐந்து நாள்களுக்குள் பதில் அளிக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.துரிதமான சேவையினை மக்களுக்கு வழங்கவேண்டும் என்பதற்காகவே இவ்வாறான நடைமுறைகள் வருகின்றன.

அரசாங்க உத்தியோகத்தர்கள் சம்பளப்பணத்தினை பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து பெறுகின்றோம்.அதன்காரணமாக பொதுமக்களுக்கு பொறுப்புக்கூறவேண்டியவர்களாகவுள்ளோம்.

சில அரசாங்க ஊழியர்கள் பொதுமக்களை இன்றுபோய் நாளை என்று இழுத்தடிப்பதன் ஊடாக சேவைகளை உரியநேரத்தில் வழங்காமலும் சம்பளத்துக்கு மேலதிகமாக கையூட்டல்களை பெறுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.அவற்றிற்கெதிராக நடவடிக்கையெடுப்பதற்கு அரசாங்க சட்டத்தில் இடமிருந்தாலும் பொதுமக்கள் உரிய உத்தியோத்தர்களின் கவனத்திற்கு கொண்டுவராத நிலையும் இருக்கின்றது.

இலஞ்சம் கொடுப்பதும் குற்றம்,பெறுவதும் குற்றம் என தெரிவிக்கப்படுகின்றபோதிலும் பொதுமக்கள் தங்களுக்குள்ள கடமைகளை,உரிமைகளை உணர்ந்துகொள்ளவேண்டும்.