ஊழல் அற்ற நல்ல சமூதாயத்தினை நல்லாட்சி உருவாக்கவேண்டும் - வியாளேந்திரன் எம்.பி.

நல்லாட்சி மலர்ந்துள்ள காலகட்டத்திலும் பிரதேச மற்றும் மாவட்ட ரீதியாக பார்க்கும்போது அரசதுறைகளிலும் தனியார் துறைகளிலும் இன்னும் ஊழல் தொடர்ந்தவண்ணமேயுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை மாலை மட்;டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான மக்கள் விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபையின் ஏற்பாட்டில் மக்களை ஊழல் தொடர்பில் விழிப்பூட்டும் வகையிலான துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்வு நடாத்தப்பட்டது.

ஊழல் தொடர்பில் மக்களை அறிவுறுத்தும் வகையிலும் அது தொடர்பில் வெளிப்படுத்தும் வகையிலும் இந்த விழிப்பூட்டல் நிகழ்வு நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபையின் எஸ்.அமலதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது பொது மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களும் வழங்கிவைக்கப்பட்டதுடன் அறிவுறுத்தல்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,

கடந்த கால அரசாங்கத்தில் அதிகளவான ஊழல்கள் நடைபெற்றன.அதன்காரணமாகவே மக்கள் ஊழலுக்கு எதிராக வாக்களித்து ஆட்சியை மாற்றியுள்ளனர்.

ஊழலை ஒழிக்கவேண்டும் என உருவாகியுள்ள நல்லாட்சி அரசாங்கம் ஊழல் அற்ற நல்ல சமுதாயத்தினை உருவாக்கிகொடுக்கவேண்டும்.

ஆனால் நல்லாட்சி மலர்ந்துள்ள காலகட்டத்திலும் பிரதேச மற்றும் மாவட்ட ரீதியாக பார்க்கும்போது அரசதுறைகளிலும் தனியார் துறைகளிலும் இன்னும் ஊழல் தொடர்ந்தவண்ணமேயுள்ளது.இந்த ஊழலால் பாதிக்கப்படுவது வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்பமுடியாத மிகவும் கீழ் மட்டத்தில் உள்ள மக்களே.

பணபலமோ அரசியல்பலமோ இல்லாத சாதாரண மக்கள் இந்த ஊழல்களால் கடும் பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.சர்வதேச ஊழல் ஒழிப்பு தினத்தில் இந்த நிலைமாற்றமடையவேண்டும்.

நல்லாட்சி அரசாங்கம் முன்னைய ஆட்சிபோல் இல்லாமல் அனைத்து விடயங்களிலும் நேர்மையான நீதியான ஆட்சியை ஏற்படுத்தவேண்டும்.