அனைவரும் சுதந்திரமாக சமத்துவமான வாழ்வுக்கான சூழ்நிலையினை உருவாக்கும் மாநாடு

இலங்கையர்கள் அனைவரும் சமத்துவமாகவும் சுதந்திரமாகவும் கௌரவத்தோடும், இந்த நாட்டில் வாழ்வதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்குவதற்காக “நாம் மாற்றுவோம்”  நடவடிக்கை மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டதாக கிழக்கிலங்கை சமூக அபிவிருத்தி மன்றமான தன்னார்வ நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஹ்மூதுலெப்பை முஹம்மத் புஹாரி முஹம்மத் தெரிவித்தார்.


“நாம் மாற்றுவோம்” செயல்வாத நடவடிக்கையின் ஆரம்பம் மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் வியாழக்கிழமை இடம்பெற்றது.

இதில் கிழக்கிலங்கை சமூக அபிவிருத்தி மன்றம்இ நியு அரோவ் முஸ்லிம் பெண்களின் வலுவூட்டலுக்கும் ஆராய்ச்சிக்குமான முஸ்லிம் பெண்களின் அமைப்பு (ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 300 பேரளவில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய கிழக்கிலங்கை சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஹ்மூதுலெப்பை முஹம்மத் புஹாரி முஹம்மத் தொடர்ந்து கூறியதாவது,

சமகாலத்தில் மக்கள் தாங்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளைப் பேசிக் கொள்வதற்கான ஒரு தளத்தை உருவாக்கி, எதிர்காலத்தில் சுதந்திரமாகவும் கௌரவத்தோடும், இந்த நாட்டில் வாழ்வதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும், எந்தத் துறைகளில் எவ்வாறான மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற கருத்துக்களை மக்களிடமிருந்து பெற்றுக் கொள்வது அவசியம்.

அதனைப் பெற்றுக் கொண்டு தேசிய ரீதியில் பயன்படக் கூடிய பொருத்தமான கொள்கையை வகுத்தெடுத்து  அதனை அரசாங்கத்திற்கும் ஆர்வக் குழுக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும். வழங்குவதனூடாக மாற்றங்களை நோக்கிச் சிந்திக்க வேண்டும்,இதற்கான தொடர்ச்சியான முன்னெடுப்பு நாடு முழுவதிலும் இன மத மொழி பிரதேச வேறுபாடுகளின்றி முன்கொண்டு செல்லப்படும்” என்றார்.

சட்டத்தரணி பாத்திமா ஹஸனா சேகு இஸ்ஸதீன் மனித சமத்துவம்; சுதந்திரம் மற்றும் கௌரவத்தைப் பேணிக் கொள்வதற்காக உகந்த சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளும் பொருட்டு கொண்டு வரப்பட வேண்டிய மாற்றங்கள் பற்றிய செயலமர்வை நடத்தி கருத்துக்களை பங்குபற்றுநர்களிடமிருந்து பெற்றார்.

நிகழ்வில் கலந்து கொண்ட பலர் தேசிய கொள்கை வகுப்பில் பாரபட்சமில்லாத பல கொள்கை மாற்றங்கள் ஏற்படுத்தப்படவேண்டியதன் அவசியம் பற்றி வலிறுயுறுத்தினர்.

நிகழ்வில் கடந்த கால ஆயுத வன்முறைகளினால் காணாமல் செய்யப்பட்டோரின் நினைவாக மெழுகுவர்த்தி ஒளியேற்றி நினைவஞ்சலியும் பிரார்த்தனையும் இடம்பெற்றது.