News Update :
Home » » இந் நாட்டில் சமத்துவம், சமவாய்ப்புகள் கிடைத்திருந்தால் இன வாரியான கட்சிகள் உருவாக வேண்டிய தேவை இருந்திருக்காது -ஞா.சிறிநேசன்

இந் நாட்டில் சமத்துவம், சமவாய்ப்புகள் கிடைத்திருந்தால் இன வாரியான கட்சிகள் உருவாக வேண்டிய தேவை இருந்திருக்காது -ஞா.சிறிநேசன்

Penulis : kirishnakumar on Thursday, December 17, 2015 | 6:22 PM

இந் நாட்டில் சமத்துவம், சமவாய்ப்புகள் கிடைத்திருந்தால். இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், சிகல உறுமைய என. இன வாரியான கட்சிகள் உருவாக வேண்டிய தேவை இருந்திருக்காது. ஒரே தேசியக்கட்சியிலேயே எல்லோரும் ஒன்று சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்பி இருப்போம்.  துரதிஷ்டவசமாக அரசியல் லாபத்துக்காக, அரசியல் பிழைப்புக்காக இனவாதத்தை கையில் தூக்கிக்கொண்டதால் நாம் ஒவ்வொருவரும் விரும்பியோ. விரும்பாமலோ இவ்வினவாதத்திற்குள் சிக்கிக் கொண்டோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர்  ஞா.சிறிநேசன்2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் தேசிய ஒருமைப்பாடு, தேசிய ஐக்கியம், தபால் சேவைகள், அனர்த்த முகாமைத்துவம், வலுவாதார வனஜீவராசிகள் அமைச்சுக்கள் மீதான விவாதத்தின் போதே சபையில் இதனை தெரிவித்தார். 

இங்கு மேலும் உரையாற்றிய அவர்..

மட்டக்களப்பு மாவட்டத்தின் நரிப்புல் தோட்டம், பன்சேனை, பாவக்கொடிச்சேனை, பலாச்சோலை, காக்காச்சி வெட்டை, திக்கோடை, புல்லுமலை, வாகரை, கட்டுமுறிப்பு போன்ற இடங்களில் காட்டு யானைகளால் 27 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதே போன்று முதலைகளின் தாக்குதலும் அதிகரித்தவண்ணமே  உள்ளன. கரடியனாறு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம் இங்கு 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே அறையிலேயே தபால் நிலையம் இயங்கி வருகின்றது. இத் தபால் நிலையத்தை தரமுயர்த்த வேண்டும் அதுபோலவே மட்டக்களப்பு தென் மேற்குப்பிரதேச செயலாளர் பிரிவில் கொக்கட்டிச்சோலையில் மட்டுமே தாபல் நிலையம் அமைந்துள்ளது பல கிலோமீற்றர்களுக்கு அப்பால் இருந்து மக்கள் இங்கு சேவையைப் பெற வர வேண்டியுள்ளது. எனவே மாவடி உம்மாரி போன்ற பிரதேசங்களில் உப தபால் நிலையங்களை அமைக்க வேண்டும் என  முன் மொழிகிறேன். 

மேலும் தேசிய ஒருமைப்பாடு தொடர்பாகவும் இன்றைய நாளில் கருத்துரைக்க வேண்டியுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை காண்பது என்பது மிக முக்கியமான விடயமாகும். இன, மத, மொழி, பால், வர்க்க, பிரதேச வேறுபாடுகளை மறந்து நாம் எல்லோரும் ஒரே தேசத்தவர் என்று வாழ்கின்ற போதே அபிவிருத்திக்கான அடித்தளம் இடப்படுகின்றது. அபிவிருத்தியடைந்த நாடுகளை எடுத்துக்கொண்டால் முதலில் அவர்கள் செய்வது  தேசிய ஒருமைப்பாட்டை  கட்டி எழுப்புவதை ஆகும். இதன் பின்னரே அபிவிருத்தி என்ற பாதையில் காலை வைக்கின்றனர். இதற்கு சிங்கப்பூர் தலைவர்  லி குவான் யு அவர்களை  சான்றாக குறிப்பிடலாம்.

அத்துடன் இந்தியாவில் 1.8% வீதமுள்ள சீக்கியர்களுள் இருந்து மண் மோகன் சிங் என்ற ஆற்றலுள்ள தலைவர் வந்தார். சீக்கியர்கள் காலிஸ்தான் என்ற தனியரசை கோரி ஹர்ஜன் சிங் பிந்ரபலே என்பவரின் தலைமையில் பொர்க்கோயிலில் கூட ஆயுதங்களை குவித்துவைத்து அரசுக்கு எதிராகப் போராடினார்கள். ஏன் இவர்களே பின்னாளில் இந்திராகாந்தியை கூட கொலை செய்திருந்தார்கள். ஆனால் அவர்கள் அவற்றை எல்லாம் மறந்து ஆற்றல் உள்ள மண் மோகன் சிங்கை பிரதமாரக்கினார்கள். இப்பாடங்களை நாமும் கற்றுக்கொள்ள வேண்டும். இன்னும் இனவாதம், மதவாதம், பிரதேசவாதம், ஜாதிவாதம் என்றெல்லாம்  பல வாதங்களை பேசிக்கொண்டிருக்கிறோம். 1919 ஆம் ஆண்டில் தேசிய காங்கிரசை உருவாக்கிய போது எங்களுடைய இனத்தைப்பற்றி சிந்திக்கவில்லை, மதத்தைப்பற்றி சிந்திக்கவில்லை மாறாக நாட்டின்  ஒருமைப்பாட்டையே சிந்தித்தோம். அதன் பலனாகவே சேர். பொன் அருணாச்சலம் போன்ற சிறுபான்மை இனத்தவரைக் கூட தலைவராக்க முடிந்தது. எனவே  காலத்தைப் பேசி பேசி பயனில்லை அக்காலத்தில் விடப்பட்ட தவறுகள் இனியும் விடப்படக்கூடாது .குறுகிய அரசியல் லாபத்துக்காக இனப்பிரச்சனையை முதலீடாக்க கூடாது. 

காலத்துக்கு காலம்  ஒவ்வொரு ஆட்சியாளர்களுக்கும் மக்கள் சந்தர்ப்பங்களை அளித்து வந்துள்ளனர். ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களுக்கு 168 ஆசனங்களில் 140 ஆசனங்கள் வரை வழங்கி ஐந்தில் ஆறு பெரும்பான்மை பலத்தினை கொடுத்திருந்தார்கள். ஆனால்  இனப்பிரச்சனையை தீர்க்க அவர் தவற விட்டு விட்டார். அத்துடன் கடந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கூட மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தினை வழங்கி இருந்தும் அவரும் வரலாற்றில் சிறந்த தலைவராக மக்கள் மனதில் இடம்பெற சந்தர்ப்பத்தை தவற விட்டு விட்டார். தற்பொழுதும் இணையவே முடியாது என்று கருதப்பட்ட இரண்டு மாபெரும் கட்சிகள் இணைந்து நல் ஆட்சியை செய்ய முனைகின்றன. இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இனப்பிரச்சனைக்குரிய தீர்வினை முன் வைக்க வேண்டும். 

வணக்கத்துக்குரிய சோபித தேரர் மறைந்த போது அவருக்காக சிறுபான்மை இனத்தவர்களும் கண்ணீர் விட்டனர். அவர்  சிறுபான்மையோர் மீது மிகுந்த அக்கறை கொண்டவராக அவர் திகழ்ந்தார். அப்படிப்பட்டவரின் கனவுப்பாதை அழிந்து விடாமல் ஜனாதிபதியும், பிரதமரும் நல்ல தீர்வினை அளிக்க வேண்டும். 

இந் நாட்டில் இலவசக்கல்வியைக் கற்று இனப்பிரச்சனைகளால் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் உயர் பதவிகளில் இருக்கும் நம் நாட்டின் புத்தி ஜீவிகளின் திறமைகளை, இன வேறுபாடுகளை மறந்து பயன்படுத்த வேண்டும். எமது ஆரையம்பதியில் கூட சதானந்தன் என்று சொல்லப்படுகின்ற விஞ்ஞானி மற்றும் அவரது மருமகன் வள்ளுவன் என்பவர்கள் நாசாவில் ஆய்வாளர்களாக பணி ஆற்றுகின்றார்கள். எமது நாட்டு வளவாளர்களை நாம்  தவறிவிட்டோம். வெறுமனே இனப்பிரிவினைகள், பழிவாங்கும் நோக்கங்களை விட்டு நாம் வெளியில் வர வேண்டும். இவ்விரு தலைவர்களும் இன்னுமொரு தடவை வரலாற்றுத் தவறினை இளைக்காமல் நிலைத்து நிற்கக் கூடிய  நியாயமான தீர்வினை இனப்பிரச்சனைக்குக்  காண வேண்டும். அத் தீர்வானது  இதயசுத்தியுடையதாக அமைய வேண்டும்              இதயங்களால் பேசி இனப்பிரச்சனையை தீர்ப்போம். சிறையில் வாடுகின்ற அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு விரைவான முடிவை எடுக்க வேண்டும் இனியும் காலத்தை தாழ்த்தாமல் இறுதியான இனப்பிரச்சனைக்கான தீர்வை இரு தலைவர்களும் இணைந்து கண்டு கொள்ள வேண்டும். 

Share this article :

Post a Comment

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger