மட்டக்களப்பில் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் நத்தார் ஆராதனைகள்

யேசு கிறிஸ்த்துவின் பிறப்பினை அறிவிக்கும் நாளாக கருதப்படும் கிறிஸ்மஸ் தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நள்ளிரவு ஆராதனைகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான கிறிஸ்மஸ் ஆராதனை மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் நடைபெற்றன.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையின் தலைமையில் இந்த வழிபாடுகள் நடைபெற்றன.

இதன்போது யேசு பிரானின் பிறப்பினை குறிக்கும் வகையில் பாலன் பிறப்பு தொழுவம் ஆயரினால் திறந்துவைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கிறிஸ்மஸ் பிறப்பு ஆராதனைகள் நடைபெற்றதுடன் யேசு பிறப்பின் நற்செய்தியும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் யேசு பிறப்பினை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் கரோல் கீதம் இசைக்கும் நிகழ்வும் இங்கு நடைபெற்றமை சிறப்பம்சமாகும்.

இந்த வழிபாடுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர்.

இந்த திருத்தலத்திலேயே முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் யோசப்பரராஜசிங்கம் நத்தார் ஆராதனையில்ஈடுபட்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.