ஏறாவூரில் தொழிற்சாலைகளை ஜனாதிபதி திறந்துவைக்கவுள்ளார்

ஆயிரக்கணக்கான வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கக் கூடிய தொழிற்சாலைகளைத் திறந்து வைப்பதற்காக ஏறாவூருக்கு ஜனாதிபதி வருகை தர விருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் புதன்கிழமை தெரிவித்தார்.


இது தொடர்பாக மேலும் தெரிவித்த முதலமைச்சர் கூறியதாவது,

வறுமை ஒழிப்புக்காக தொழிற்சாலைகளை ஆரம்பித்து அதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்ளும் கனவை நனவாக்கும் நோக்குடன் ஏறாவூரில் 6 ஆறு தொழிற்சாலைகள் திறந்து வைக்கப்படவுள்ளன.

ஆடைத் தொழிற்சாலை ஒன்று கைத்தறித் தொழிற்சாலைகள் இரண்டு என்பவை பெப்ரவரி 6 ஆம் திகதி ஏறாவூரில் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படுவதன் மூலம் குறைந்த பட்சம் நேரடியாக ஆயிரம் குடும்பங்களும், மறைமுகமாக 2000 குடும்பங்களும் வேலைவாய்ப்பைப் பெறும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

இதனைவிட ஏறாவூர்ப் பிரதேசத்தில் மேலும் மூன்று பாரிய சர்வதேச உற்பத்தித் தொழிற்சாலைகள் நிர்மாணிக்கப்படவிருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை மனைப் பொருளாதாரத்தை மேம்படுத்தி நிரந்தர வாழ்வாதாரத்தை ஈட்டிக் கொள்வதற்காக ஏறாவூர்ப் பிரதேசத்தில் ஏற்கெனவே 200 குடும்பங்களுக்கு தலா ஒன்றரை இலட்ச ரூபாய் செலவில் நல்லின கோழிகள் வளர்ப்பதற்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன் மூலம் அந்தக் குடும்பங்கள் அடுத்த ஓரிரு மாதங்களில் மாதாந்தம் சுமார் 18 ஆயிரம் ரூபாவுக்குக் குறையாத வருமானத்தை ஈட்டிக் கொள்ளும் என்று தான் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.