சமூகத்தின் வளர்ச்சியின் தூணாக சேமிப்பு உள்ளது –மட்டு.வங்கி முகாமையாளர் சரவணபவன்

எதிர்கால சமூகத்தின் வாழ்வினை ஒளிமயமானதாக மாற்றவேண்டுமானால் அவர்களுக்கான சேமிப்பு மிகவும் அவசியமானது என மட்டக்களப்பு அரசடி மக்கள் வங்கியின் முகாமையாளர் எஸ்.சரவணபவன் தெரிவித்தார்.

ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் அந்த சமூகத்தின் வளர்ச்சிக்கும் மிகவும் தூணக இந்த சேமிப்பு அமைவதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு அரசடி மக்கள் வங்கியின் பரிசளிப்பு நிகழ்வும் ஒளிவிழாவும் இன்று வியாழக்கிழமை காலை அரசடியில் உள்ள வங்கி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஆன்மீக அதிதியாக அருட்தந்தை இக்னேசியஸ் அடிகளார் கலந்துகொண்டதுடன் அதிதிகளாக மக்கள் வங்கியின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முன்னாள் உதவி முகாமையாளர் ஏ.ரவீந்திரன், மக்கள் வங்கியின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உதவி முகாமையாளர் அ.சர்வேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது எஸ்.எம்.எஸ். ஊடாக அதிக கொடுக்கல் வாங்கல்களைக்கொண்டவருக்கு பரிசு வழங்கப்பட்டதுடன் சிறுவர்களுக்கும் பரிசுகள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மக்கள் வங்கி பிராந்திய அலுவலகத்தில் சிறிய நடுத்தர கைத்தொழில் பிரிவு முகாமையாளராக கடமையாற்றும் அசங்க இரோசன தலைமையகத்திற்கு இடமாற்றம் பெற்றுச்செல்வதையடுத்து அவர் இங்கு கௌரவிக்கப்பட்டார்.