மட்டக்களப்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக பெண்கள் அமைப்புகள் கவன ஈர்ப்பு போராட்டம்

சிறுவர் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகளை கட்டுப்படுத்துமாறு கோரியும் பெண்களின் சமத்துவத்தினை வலியுறுத்தியும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிச்சோலையில் கவன ஈர்ப்பு பேரணியும் வீதி நாடகமும் பெண்கள் மாநாடும் நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அதிகாரசபை,பால்நிலை அடிப்படையிலான வன்முறையை குறைக்கும் செயலணி ஆகிய இணைந்து அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு மற்றும் பெண்கள் அமைப்புகள் அனுசரணையுடன் இந்த நிகழ்வினை நடாத்தியது.

இதன்போது கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு 10நாள் செயற்பாட்டு வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு நடைபெற்றது.

பெண்கள் மீதான வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர அனைவரும் பொறுப்புடன் செயற்படுவோம் என்னும் தலைப்பில் இறுதி நாள் நிகழ்வு நடைபெற்றது.

கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இருந்து ஆரம்பமான கவன ஈர்ப்பு பேரணியானது கொக்கட்டிச்சோலை சந்திவரையில் நடைபெற்றது.
அங்கு கவன ஈர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டதுடன் சூரியா பெண்கள் அமைப்பின் கலாசார பகுதியினரின் வீதி நாடமும் நடாத்தப்பட்டது.

வன்முறையற்ற நாடும் வீடும் எங்களுக்கு வேண்டும், பெண்களின் சமத்துவமான பங்களிப்பே நிலையான அபிவிருத்திக்கு வித்திடும், வன்முறையற்ற வாழ்வே வளமான வாழ்வு, வன்முறையற்ற வாழ்வே வளமான வாழ்வு ஆகிய சுலோகங்கள் தாங்கிய பதாககைளையும் போராட்டத்தில் கலந்துகொண்டோர் ஏந்தியிருந்தனர்.

இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, பட்டிப்பளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றன.