இலங்கையில் நான்கு பெண்களில் ஒரு பெண் 18வயதினை அடையும் முன்னர் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்படுகின்றனர்

இலங்கையில் நான்கு பெண்களில் ஒரு பெண் 18வயதினை அடையும் முன்னர் பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பெண்கள் மீதான வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர அனைவரும் பொறுப்புடன் செயற்படுவோம் என்னும் தலைப்பிலான பெண்கள் 10நாள் செயற்பாட்டு வாரத்தின் இறுதி நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அதிகாரசபை,பால்நிலை அடிப்படையிலான வன்முறையை குறைக்கும் செயலணி ஆகிய இணைந்துபெண்கள் அமைப்புகள் அனுசரணையுடன் இந்த நிகழ்வினை நடாத்தியது.

இந்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.ஏ.ரஹ{மான்,மண்முனை தென் எருவில் பற்று(களுவாஞ்சிகுடி)பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்தியகௌரி தரணிதரன், பட்டிப்பளை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன் ஆரம்ப நிகழ்வில் பெண்களினால் மெழுகு திரியில் ஒளியேற்றப்பட்டு பெண்கள் மீதான வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர அனைவரும் பொறுப்புடன் செயற்படுவோம் என்னும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இதன்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பிலான விழி;ப்புணர்வு கருத்துரைகள் வழங்கப்பட்டதுடன் சூரியா பெண்கள் அமைப்பின் கலாசார குழுவின் விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடாத்தப்பட்டது.

இதன்போது பெண்களின் நிலைமைகள் தொடர்பில் துண்டுப்பிரசுரங்களும் வெளியிடப்பட்டது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தவறிழைத்தவர்கள் தண்டனைகளில் இருந்து தப்பி சுதந்திரமாக நடமாடும் கலாசாரமொன்று நடைபெற்றுவருகின்றது.இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பரந்தளவில் காணப்படுதை அண்மைக்கால அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.பெண்களுக்கு எதிரான வன்முறையை அனுபவிப்பதற்கான உயரிய ஆபத்தினைக்கொண்டுள்ளனர்.

2013ஆம் ஆண்டு அறிக்கையின்படி பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான வன்முறைகள் மற்றும் துஸ்பிரயோகங்கள் அதிகளவில் அறிக்கையிடப்பட்டுள்ளன.

இலங்கையில் 60வீதமான பெண்கள் வீடுகளில் இடம்பெறும் வன்முறைகளினால் துன்பங்களை அனுபவிக்கின்றனர்.