ஸ்ரீ ரமண மகரிசியின் 136ஆவது ஆண்டு ஜெயந்தி விழாவும் சபரிமாலை பாதயாத்திரை குழுவினரின் இறுதி மண்டல பூஜையும்

பகவான் ஸ்ரீ ரமண மகரிசியின் 136ஆவது ஆண்டு ஜெயந்தி விழாவும் சபரிமாலை பாதயாத்திரை குழுவினரின் இறுதி மண்டல பூஜையும்  மட்டக்களப்பு ஏறாவூர் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.


திருவண்ணாமலை ஸ்ரீ ரமணாச்சிரமத்தில் நிரந்தர அனுக்கிரக விலாசத்துடன் விளங்கும் ஸ்ரீ பகவத் சந்நிதியில் ரமண மகரிசியின் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

இலங்கைக் கிளையினரால் மட்டக்களப்பு ஏறாவூர் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் பகவான் ராமண மகரிசியின் 136ஆவது இவ்விழா நடாத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.சிறிநேசன் கலந்து கொண்டதுடன் கௌரவ விருந்தினர்களாக கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி, மீன்பிடி, நரீர்ப்பாசனம், கூட்டுறவு அபிவிருத்தி மற்று உணவு விநியோகத்துறை அமைச்சர் கி.துரைராஜசிங்கம் கலந்துகொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட பீடாதிபதி கலாநிதி க.இராஜேந்திரம், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கி.குணநாயகம், ஏறாவூர் ஸ்ரீ கணேச காளிகா ஆலய பரிபாலன சபைத் தலைவர் பொ.கஜேந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று சபரிமலை யாத்திரையை மேற்கொள்வோரின் இறுதி மண்டல பூஜையும் இங்கு சிறப்பான முறையில் நடைபெற்றது.

சொல்வேந்தர் விஸ்வப்பிரம்மஸ்ரீ வை.காந்தன் குருக்கள் தலைமையில் விசேட யாகம் மற்றும் அம்மன் பூஜையும் நடைபெற்றது.

அடியார்களின் பஜனை மற்றும் விஸ்வப்பிரம்மஸ்ரீ வை.காந்தன் குருக்களின் விசேட சொற்பொழிவுகள் நடைபெற்றதுடன் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

சபரிமலைக்கான யாத்திரை காலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நாடெங்கிலும் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.