மட்டக்களப்பில் நாளை நடைபெறவிருந்த கவன ஈர்ப்பு போராட்டம் ரத்து –வெள்ளி பூரண ஹர்த்தால்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளை மட்டக்களப்பில் நடைபெறவிருந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறாது என தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (13)மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு வேண்டுகோள்விடுத்துள்ளது.

இது தொடர்பில் இன்று மாலை 6.00மணியளவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தில் விசேட கூட்டம் ஒன்று நடைபெற்றது.

தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் கிழக்கு மாகாணசபை அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாரர்ளுமன்ற உறுப்பினர்கள்,மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களின் மாகாணசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

உயிரிழந்த மாதுருபாவே சோபித தேரருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு இந்த கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இறுதியாக கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் துரைராஜசிங்கம்,

30-ஆம் திகதியில் இருந்து 07ஆம் திகதிக்குள் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லையென்றும் தாங்கள் உடனடியாக விடுதலைசெய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இவர்களுக்கு தார்மீக ஆதரவு வழங்கவேண்டிய பொறுப்பினை உணர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் பூரண ஹர்த்தால் நடாத்துவதாக தீர்மானம் எடுத்துள்ளது.

அதற்கு ஆதரவு வழங்குவதற்கு மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இன்று கலந்துரையாடி தீர்மானத்தினை எடுத்துள்ளோம்.

இதனடிப்படையில் நாளை வியாழக்கிழமை நடைபெறவிருந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறாது என்பதையும் நாளை மறுதினம் நடைபெறும் பூரண ஹர்த்தாலில் மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களும் இணைந்து பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்க பங்களிப்பினை வழங்கும்.

பொதுமக்களை நாங்கள் வேண்டிக்கொள்வது மிகவும் சாத்வீகமான முறையில்,எந்தவிதமான வன்முறைக்கும் இடம்கொடுக்காத வகையில் பூரண ஹர்த்தாலை அனுஸ்டிக்கவேண்டும்.

அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கையினை உடனடியாக கவனத்தில் கொண்டு அவர்களை உடனடியாக விடுதலைசெய்யவேண்டும் என்ற நியாயமான கோரிக்கையினையும் நாங்கள் முன்வைக்கின்றோம்.