கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு முன்பாக கல்வி அமைச்சர் நிராயுதபாணி,விவசாய அமைச்சர் தலையாட்டி பொம்மை –அமீர் அலி காட்டம்

கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு முன்பாக ஒரு நிராயுதபாணி. கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் ஒரு தலையாட்டி பொம்மை என கிராமிய அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.


ஏறாவூர் அல் அஷ்ஹர் வித்தியாலயத்தில்  ஞாயிறன்று இடம்பெற்ற ஆற்றலுள்ள மாணவர்களைக் கௌரவிக்கும் வருடாந்த நிகழ்வில் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமீர் அலி மேலும் தெரிவித்ததாவது,

கிழக்கு மாகாணத்திற்குத் தலைமை தாங்குகின்ற அரசியல்வாதி மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொள்கின்றார். அதனால் இந்த மாகாணத்திற்கு இப்பொழுது ஒரு நோய் பீடித்திருக்கிறது. அதனால் அந்த மாகாணம் சீரழிந்து கொண்டிருக்கின்றது. கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி முதலமைச்சரின் முன்னால் ஒரு நிராயுதபாணி. கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் ஒரு தலையாட்டி பொம்மை.
தற்போது அராஜக ஆட்சியை நடத்திக் கொண்டு கோலோச்சுகின்ற கிழக்கு மாகாணத் தலைமைக்கு சில அதிகாரிகள் சாமரம் வீசுகின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமல்ல கிழக்கு மாகாண தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லோரும் சேர்ந்து தற்போதைய கிழக்கு மாகாணத் தலைமைக்கு புத்தி சொல்லி சீர் கெட்டுக் கிடக்கின்ற மாகாண நிருவாகத்தைச் சீர் செய்ய வேண்டும்.

பாடசாலைகளிலுள்ள பழைய கட்டிடங்களை மாகாணத்தின் அதிகாரம் என்று காட்டிக் கொண்டு திறந்து வைக்கின்ற ஒரு அநாகரிக அரசியல் நடந்து கொண்டிருக்கின்றது.
மக்கள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு எம்மிடம் வேண்டுகோள் விடுத்தவண்ணமுள்ளார்கள்.

எவ்வாறெனினும் எதிர்காலத்தில் நாங்கள் இந்த அராஜக நடவடிக்கைகளை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை.இது பற்றி நாங்கள் நாடாளுமன்றத்திலும் நாடு முழுக்க ஒலிக்கும் வண்ணம் பகிரங்கமாகப் பேசப் போகின்றோம்.

நாடாளுமன்றத்திலே நானுட்பட, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஸ்ரீலமுகாவின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா ஆகியோர் கிழக்கு மாகாண முதலமைச்சரின் அரசியல் அநாகரிகங்களை பிரேரணையாகக் கொண்டு வந்து முடிவு கட்டவிருக்கின்றோம். இதிலிருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை.

அதிகாரம் கிடைத்து விட்டது என்பதற்காக அராஜகம் செய்ய வேண்டும் என்றில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் ஐயா தனது தீர்மானத்தை மாற்றிக் கொண்டால் இந்நாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் முன்னாள் முதலமைச்சராக மாறுவதற்கு அதிக நேரம் எடுக்காது.

அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் அச்சுறுத்தி அடக்கி ஒடுக்குவதற்கு நினைப்பதைவிட கிழக்கு மாகாண முதலமைச்சர் தனக்கு வழங்கப்பட்டிருக்கின்ற மாகாண அதிகாரங்களை நல்ல விடயங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கிழக்கு மாகாண மக்களுக்கு காணி, நீர்ப்பாசனம், மேய்ச்சல் தரை, காட்டு யானைத் தொல்லை, கடற்றொழில் மீனவர்களின் பிரச்சினை, அகதிகளின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு என்று பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டியிருக்கின்றது” என்றார்.

இந்நிகழ்வில் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஸ்ரீலமுகா தவிசாளருமான பஷீர் சேகுதாவூத், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் தற்போதைய மாகாண சபை உறுப்பினர்களுமான எம்.எஸ். சுபைர், எம்.எஸ். உதுமாலெப்பை உட்பட இன்னும் பல அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.