கிழக்கு முதலமைச்சரின் செயற்பாடு அருவருக்கத்தக்கது –மீள்குடியேற்ற பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா

கடந்த காலங்களில் இந்த மாகாணத்திற்கும் இந்த மாவட்டத்திற்கென்றும் ஒரு அழகிய அரசியல் கலாச்சாரம் இருந்து வந்துள்ளது. ஆயினும், தற்போது கிழக்கு மாகாணத்தை ஆளுகின்ற முதலமைச்சர் மேற்கொண்டு வருகின்ற அநாகரிக அருவருக்கத் தக்க அரசியல் கலாச்சாரம் வெறுக்கத் தக்கதாக உள்ளன. அவரது நடவடிக்கைகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புஸ்லாஹ் தெரிவித்தார்.


சமூக நல்லிணக்கத்திற்கும் வலுவூட்டலுக்குமான நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கல்வியில் புலமை காட்டிய மாணவர்களைக் கௌரவித்து பரிசுகள் வழங்கும் நிகழ்வு அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நஸீர் தலைமையில் ஏறாவூரில் ஞாயிறு இரவு இடம்பெற்றது.

அந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்ததாவது,

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்ட அரசியல்வாதிகளிடத்தில் ஒரு அந்யோன்யமான ஒத்தழைப்புக் கலாச்சாரம் இருந்தது. அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்கின்றபோது பரஸ்பர ஒத்துழைப்புடன் நாம் செயற்பட்டோம்.

ஆயினும். அவ்வாறான ஒரு அழகிய புரிந்துணர்வுள்ள நாகரீகம் மிக்க அரசியல் கலாச்சாரம் தற்போதைய  கிழக்கு மாகாண முதலமைச்சரால் சீரழிக்கப்பட்டு வருகின்றது. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அவரது நடவடிக்கைகள் வெறுக்கத் தக்கதாக உள்ளன. ஒரு வருடத்திற்கு முன்னர் காத்தான்குடியிலே எனது முயற்சியிலே உருவாக்கப்பட்டு என்னால் திறந்து வைக்கப்பட்ட கட்டிடத்தை புதிதாக வந்து திறந்து வைக்கும் முதலமைச்சரின் சிறுபிள்ளைத் தனமான அரசியல் சகிக்கக் கூடியதாக இல்லை.

யுத்தம் முடிந்த பின்னர் முதலாவது மாகாண சபை நிருவாகத்தை நாங்கள்தான் தோற்றுவித்து மிகக் கஷ்டத்தின் மத்தியிலே மாகாண நிருவாகத்தைச் சீரமைத்தோம்.
மாகாண அமைச்சர்களாயிருந்த நாங்கள் அப்போதைய முதலமைச்சருக்கு இணையாக, துணையாக இருந்து எத்தனையோ சீரமைப்புக்களைச் செய்தோம்.

சட்டங்களை உருவாக்கி, மத்திய அரசு தர மறுத்த பல அதிகாரங்களைப் பறித்தெடுத்து அந்த ஆட்சியிலே தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்கள் இணைந்திருந்து பல பணிகளைச் செய்தோம்.

ஒருவரோடு ஒருவர் கலந்தாலோசித்து அபிவிருத்திகளைச் செய்து வந்தோம்.
நான் தற்போது மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் ஆகையினால் நான் எல்லோருடனும் கலந்தாலோசித்துத் தான் பணிகளைச் செய்கின்றேன்.
தற்போதைய முதலமைச்சர் தான்தோன்றித் தனமாக நடந்து கொள்கின்றார்.
அவர் காட்ட வேண்டிய அதிகாரம் இதுவல்ல.
13 வது சரத்திலே மாகாண சபைகளுக்கு நூற்றுக் கணக்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால் ஏனைய மாகாணங்களுக்கு கொடுத்திருக்கின்ற அதிகாரத்தைக்கூட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திற்கு கொடுக்காமல் மத்திய அரசு தட்டிப் பறித்து வைத்துள்ளது.

வடமேல் மாகாண முதலமைச்சருக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அந்த அதிகாரம் கிழக்கு மாகாண சபைக்குத் தரப்படவில்லை.சட்ட ரீதியாக முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட பல அதிகாரங்களை ஒரு வர்த்தமானி அறிவித்தலோ அல்லது ஒரு சுற்று நிருபமோ இன்றி மத்திய அரசு கிழக்கு மாகாண சபைக்கு வழங்காது தடுத்து நிறுத்தியுள்ளது.

எனவே அதனைப் பெற்றுக் கொள்வதற்காக முதலமைச்சர் போர்க்க கொடி உயர்த்த வேண்டுமே தவிர உள்ளுர் அரசியல்வாதிகளை முடக்கி கிடைக்கின்ற அபிவிருத்திகளைத் தடுக்கின்ற ஒரு முதலமைச்சராக கிழக்கு மாகாண முதலமைச்சர் இருப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.

இதனை அவர் அறிவுடன் உரசிப் பார்த்து சிந்தனை செய்து கொள்ள வேண்டும்.
பழைய கட்டிடத்தை புதிதாக நாடா வெட்டித் திறந்து வைத்துப் புகழ்பாடுகின்ற முதலமைச்சர் கிழக்கு மாகாணத்துக்குத் தேவையில்லை.

நாங்கள் பதவியில் இருந்தாலும் இல்லாதிருந்தாலும் நாம் சமூகத்தில் எப்படி நடந்து கொண்டோம் என்கின்ற மதிப்பை சமூகம் தரும். அது நடவடிக்கையைப் பொறுத்து பெருமைப்படும் படியாகவும் இழித்துரைக்கக் கூடியதாகவும் இருக்கும்.” என்றார்.