கிழக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாட்டிற்கு அடுத்த ஆண்டுமுதல் பல்வேறு திட்டங்கள்

கிழக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாட்டிற்காக அடுத்த ஆண்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் பைஷால் காசிம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு திருமலை வீதியில் உள்ள எஸ்.பி.மெடிசிலோனி ஆய்வுகூடத்தில் இன்று முற்பகல் பெண்களுக்கான இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஸ்.பி.மெடிசிலோனி ஆய்வுகூடத்தின் பணிப்பாளர் எஸ்.பாபு தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் பிரதி சுகாதார அமைச்சர் பைஷால் காசிம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக காத்தான்குடி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் கே.எம்.ஜாபீர் உட்பட சுகாதார திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது காத்தான்குடி வைத்தியசாலைக்கு இரத்த பரிசோதனை உபகரணங்கள் மற்றும் மருந்துப்பொருட்களும் அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் 60க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனையை மேற்கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதியமைச்சர், இன்று இலங்கையில் மட்டுமன்றி கிழக்கு மாகாணத்திலும் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்த நிலையிலேயே இருந்துவருகின்றது.இந்த புற்றுநோய் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது.

அதிகளவில் புற்றுநோய் தாக்கத்திற்கு பெண்கள் உட்படுகின்றனர்.அவர்கள் தங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளை வெளியில் கூறுவதற்கு தயங்குவதன் காரணமாக உயிரிழக்கும் நிலை ஏற்படுகின்றது.

அந்த நிலையை அவர்கள் மாற்றவேண்டும்.இன்று மட்டக்களப்பில் புற்றுநோய் வைத்தியசாலை திறக்கப்பட்டுள்ளது.அதேபோன்று இவ்வாறான ஆய்வுகூடங்களும் திறக்கப்பட்டுள்ளன.

இன்று புற்நோயை கண்டறிவதற்கான பல்வேறு இடங்கள் உள்ளன.அவற்றின் மூலம் அவற்றினை கண்டறிந்து ஆரம்பத்தில் அவற்றினை குணப்படுத்துவதற்கான நடவடிக்கையினை எடுப்பது நல்லது.

சுகாதார அமைச்சு மூலம் புற்று தொடர்பிலான விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்திலும் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றார்.