நாடகம் பாடத்தில் ஒன்பதாயிரம் சாதாரண தர மாணவர்கள் தோற்றுகின்றனர் –பேராசிரியர் மௌனகுரு

இம்முறை கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சையில் நாடகமும் அரங்கிலும் பரீட்சைக்காக ஒன்பதாயிரம் தமிழ் மாணவர்கள் தோற்றவுள்ளதாக பேராசிரியர் சி.மௌனகுரு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்காக நடாத்தப்பட்டுவரும் நாடக பயிற்சி முகாமின் நான்காம் கட்டம் நிறைவு நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஆனைப்பந்தி விவேகானந்தா மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

கல்வி திணைக்களத்தின் அழகியல் பிரிவிற்கான மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஜெயஸ்ரீபவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் என்.ரி.எம்.நிசாம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் கலந்துகொண்டார்.

மாணவர்கள் மத்தியில் திறன்களை வளர்க்கும் வகையில் இந்த நாடகப்பயிற்சி முகாம் நடாத்தப்பட்டுவருகின்றது.
இந்த பயிற்சி முகாமில் ஆறு குழுக்களாக 100 மாணவர்கள் பயிற்சிபெற்றுவருகின்றனர்.

பயிற்சி பட்டறையின் ஆரம்பத்தின்போது சாதாரண மாணவர்களாக கலந்துகொண்ட இவர்கள் தற்போது ஆளுமை மிக்கவர்களாக மாறிவருவதாக இங்கு கருத்து தெரிவித்த பேராசிரியர் மௌனகுரு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இந்த பணியென்பது நாடகமும் அரங்கியலையும் வளர்ப்பது மாத்திரம் அல்ல.நாடகமும் அரங்கிலும் பாடநெறியாக வந்துள்ளது.கா.பொ.த.சாதாரண தரம் 9000ஆயிரம் பிள்ளைகள் தமிழ் மொழியில் தோற்றுகின்றனர்.சிங்கள மொழியில் 29000பேர் தோற்றுகின்றனர்.

சந்திரிகா ஆட்சிக்காலத்தில் மாணவர்களின் ஆளுமையினை வளர்க்கவேண்டும் என்பதற்காக இந்த பாடநெறியை கட்டாயமாக்கினார்.இந்த பயிற்சி நெறியானது 40க்கு மேற்பட்ட திறன்களை வளர்க்கின்றது.

எமது பாடசாலைகளில் நாடக்கல்வி அவ்வாறு கற்பிக்கப்படுவதில்லை.நாடகத்துறையில் இலகுவில் சித்திபெறலாம் எனவும் அவற்றினை ஒரு நகைச்சுவையான விடயமாகவுமே எமது பாடசாலைகளில் பார்க்கப்படுகின்றது.

நாடக ஆசிரியர்களுக்கு கடுமையான பயிற்சிகள் வழங்கப்படவேண்டும். அவ்வாறு அவர்கள் பயிற்சிபெறும்போதே அதன் மகிமை மாணவர்களுக்கு முழுமையாக கொண்டுசெல்லப்படும்.அதற்காக மட்டக்களப்பு கல்வி வலயமும் இணங்கியுள்ளது.அதற்கான பயிற்சிகள் எதிர்காலத்தில் நடைபெறும்.எங்களுக்கு நாடகம் முக்கியம் அல்ல.அந்த நாடகத்தின் மூலம் உருவாகப்போகும் ஆளுமையே முக்கியம்.

மட்டக்களப்பு கல்வி வலயம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி வலயங்களையும் இணைத்து ஒரு முன்மாதிரி கல்வி வலயமாக நாடகம் ஊடாக மாணவர்களின் ஆளுமையை விருத்திசெய்யும் வகையில் இந்த பயிற்சி பட்டறையை நடாத்துகின்றது.