டாக்டர்.எஸ்.சதுர்முகம் அவர்களுக்கு பிரியாவிடையுடன் கூடிய பாராட்டு நிகழ்வு

(ஜே.எச்.இரத்தினராஜா)

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்.எஸ்.சதுர்முகம் அவர்கள் திருகோணமலை, பொது வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுச்செல்லும் நிலையில் அவருக்கான பிரியாவிடை வைபவம் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.


அவர் கடந்த பத்து வருடங்களுக்குமேல் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றியவர். தற்சமயம் திருகோணமலை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகாராக பொறுப்பேற்றுள்ளார்.

இவருக்கு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் இணைந்து தற்போதய பணிப்பாளர் டாக்டர்.ஏ.எல்.எப்.றஹ்மான் தலைமையில் பிரியாவிடையுடன் கூடிய பாராட்டு நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்தியத்தின் கீழ் கடமைபுரியும் பிராந்திய வைத்திய உத்தியோகத்தர்கள், வைத்திய அத்தியட்சகர்கள், பொறுப்பு வைத்திய அதிகாரிகள், சுகாதார வைத்திய அதிகாரிகள், அலுவலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டு அவரது சேவை பற்றியும், குண இயல்புகள் பற்றியும் எடுத்துரைத்தனர்.

டாக்டர்.எஸ்.சதுர்முகம் அவர்கள் சமூகத்தை நேசித்தவர், மட்டக்களப்பு மாவட்டத்தில் பின் தங்கிய பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகள்  வளம்பெறவும், தரம் உயரவும் தம்மாலான அனைத்து முயற்சிகளையும் எடுத்து இன்று அவை சிறந்த சேவையை ஆற்றிக்கொண்டிருப்பது என்றால் இவரது முயற்சியேயாகும். கதிரவெளி தொடக்கம் துறைநீலாவணை வரையுள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும்; தேவையான வளங்களைப் பெற்றுக்கொடுப்பதில் முன்னின்று உழைத்தவர். இன, மத வேறுபாடின்றி அனைவரையும் ஒன்றாகவே கருதி அனைவருக்கும் சேவை கிடைப்பதற்காக தம்மை அர்ப்பணித்துச் செயற்பட்ட ஒருவர். அது மட்டுமன்றி உத்தியோகத்தர்கள், ஊழியர்கள்  நலனிலும் அக்கறைகொண்டு அவர்களது வளர்ச்சிக்கு உறுதுணை புரிந்தவர்.

விழா நிறைவில் வாழ்த்து மடல் வாசித்துக் கையளிக்கப்பட்டதுடன், பொன்னாடை போர்த்தியும் நினைவுப்பரிசுகள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார். கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

குறிப்பாக கிழக்கு மாகாணத்திலுள்ள திணைக்களங்களில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் உற்பத்தித்திறனில்; முதன்மையான அலுவலகமாக விளங்குகின்றது. கடந்த வருடம் தேசிய ரீதியாக இடம்பெற்ற போட்டியில் 2வது இடத்தைப் பெற்று சாதனை படைத்ததுடன், மாகாண சுகாதார திணைக்களங்களுக்கிடையே நடைபெற்ற விளையாட்டுப்போட்டியில் தொடர்;ச்சியாக இரு தடவைகள் வெற்றிக்கிண்ணத்தைப்பெற்றமைக்கும் இவரது தலைமைத்துவமும், வழிநடத்தலுமே காரணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஏற்கனவே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகவும் கடமைபுரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.