இனங்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர் சோபித்த தேரர் –பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திகுமார்

இந்த நாட்டில் நல்லாட்சி ஏற்படுவதற்கும் இனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஏற்படுவதற்கும் அர்ப்பணிப்புமிக்க சேவையாற்றிவந்த சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரரின் மறைவு இந்த நாட்டிற்கு பேரிழப்பாகும் என கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த நாட்டில் அராஜக நிலை தலைதூக்கியபோது அதற்கு எதிராக துணிந்து களமிறங்கிஅ ர்ப்பணிப்புடன் சேவையாற்றியவராக மாதுலுவாவே சோபித்த தேரர் இருந்துவந்தார்.இலங்கையில் சிறந்த ஜனநாயகம் தழைத்தோங்குவதற்கு ஆட்சிமாற்றம் ஒன்று அவசியம் என்று உணர்ந்து சமூக நீதிக்கான மக்கள் இயக்கம் ஒன்றை ஆரம்பித்து நல்லாட்சியை விரும்பும் அனைவரையும் ஒன்றிணைத்து போராட்டங்களை நடாத்திவந்தார்.

அதன் பயனாக 2015ஆம் ஆண்டு இந்த நாட்டில் புதுயுகம் படைக்கப்பட்டு அனைத்து மக்களும் ஓரளவு சுதந்திரமாக தமது அரசியல் நடவடிக்கையினை மேற்கொள்ளும் நிலைமை ஏற்படுத்தப்பட்டது.உண்மையில் இந்த அர்ப்பணிப்புமிக்க சேவையினை மேற்கொண்டதில் பெரும் பங்கினையாற்றியவர் மூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

அதுமட்டுமன்றி இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையின மக்களுக்கு சரிநிகரானவர்கள் என்பதை ஏற்றுக்கொண்டவர் என்பதையும் இந்த தருணத்தில் நாங்கள் குறிப்பிடவேண்டும்.அத்துடன் இந்த நாட்டில் பயங்கரவாதம் நிலவவில்லை,பொருளாதார பிரச்சினையே நிலவியது என்ற கருத்தினையும் துணிந்து சிங்கள மக்கள் மத்தியில் தெரிவித்துவந்தவர் மூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரராகும்.

இந்த நாட்டில் தேரர்கள் சிறுபான்மை சமூகம் ஒன்று இந்த நாட்டில் இல்லை.இது பௌத்த நாடு என்று தெரிவித்துவந்த நிலையில் இந்த நாட்டில் சிறுபான்மை சமூகம் ஒன்று உள்ளது அவர்களும் அனைத்து உரிமைகளையும் பெற்றுவாழவேண்டும் என குரல் கொடுத்தவர் சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர் என்பதை தமிழ் மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள்.

அதுமட்டுமன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரலாம் என்று கூறி தமிழ் மக்களின் நன்மதிப்பினைப்பெற்றவர்.

இந்த நிலையில் தமிழ் மக்களுக்கான எந்தவித தீர்வும் வழங்கப்படாத இந்த நிலையில் மாதுலுவாவே சோபித்த தேரர் போன்றவர்களின் இழப்பு தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி சிறுபான்மை மக்களுக்கு பேரிழப்பாகும்.

உயிரிழந்த அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் தமிழ் சமூகம் சார்பில் எங்களது ஆழ்ந்த கவலையினையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.