திராய்மடு கிராம பகுதியில் உள்ள வீட்டுநிலப்பகுதிகள் வெள்ள நீரினால் மூழ்கி காணப்படுகின்றன

( லியோ ) 
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட  திராய்மடு  கிராம  பகுதியில்  உள்ள பல வீதிகள்  மற்றும் தாழ்நில  வீட்டுப்பகுதிகள் வெள்ள நீரினால் மூழ்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 


திராய்மடு  கிராம பகுதியின்  பல  வீதிகள் பல வருடகாலமாக புனரமைக்கப்படாமல்   வெள்ளநீர் வடிந்து செல்வதற்கான   வடிகான்கள்  இல்லாமல்  வீதிகள்  காணப்படுவதால்  தற்போது பெய்து வரும் மழையினால் வீதிகள் ,வீட்டுநிலப்பகுதிகள்  வெள்ள நீரினால் மூழ்கி உள்ளதாகவும் இப்பிரதேச  மக்கள்  தெரிவிக்கின்றனர் .
இந்த  நிலை ஒவ்வொரு வருடமும் மழைக்காலங்களில்  தாங்கள் எதிர்நோக்குவதாகவும்  தெரிவிக்கின்றனர்

இதனால் இப்பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் , பாடசாலை செல்லும் மாணவர்கள் , அரச உத்தியோகத்தர்கள் , நோயாளிகள் , கர்ப்பிணி தாய்மார்கள்  பல இன்னல்கள் அனுபவித்து வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர் .

இதேபோன்று  இப்பகுதியில்  உள்ள  கிணற்று நீரினை பாவிக்கமுடியாத நிலையும் காணப்படுவதுடன் தமது அன்றாட  கடமைகளை  செய்துகொள்ள முடியாத நிலையில் பெரும் துன்பங்களை அனுபவித்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர் .

இது தொடர்பாக  பல முறை உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தபோதிலும் இதுவரை எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என  விசனம் தெரிவிக்கின்றனர் .