மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி

மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்திய பதிவுசெய்யப்பட்ட கழகங்கள் மற்றும் 17வயதுகுட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி.உதைபந்தாட்ட கழகம் சம்பியனானதுடன் மட்டக்களப்பு அமிர்தகழி சித்திவிநாயகர் வித்தியாலயமும் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.


இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் முன்னாள் தலைவர் ரஞ்சித் ரொட்றிக்கோவின் ‘ரஞ்சித் சவால் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி’ பெயரில் இந்த சுற்றுக்போட்டி நடாத்தப்பட்டது.

நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இறுதிப்போட்டிகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனமும் மட்டக்களப்பு கல்வி வலயமும் இணைந்து 17வயதுக்குட்பட்ட மாணவர்கள் பங்குகொண்டிருந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நடாத்தப்பட்டுவந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் 2015ஆம் ஆண்டுக்கான மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட ஏ கழகங்களுக்கிடையிலான சுப்பர் லீக் சுற்றுப்போட்டியும் நடாத்தப்பட்டுவந்தது.

இந்த அடிப்படையில் நடைபெற்ற போட்டிகளின் புள்ளி அடிப்படையில் முதல் இடத்தினை ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி.அணியும் இரண்டாம் இடத்தினை சீலமுனை யங்ஸ்டார் அணியும் மூன்றாம் இடத்தினை கூழாவடி டிஸ்கோ அணியும் பெற்றுக்கொண்டது.

இதேபோன்று சனிக்கிழமை மாலை பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டியின் இறுதிப்போட்டி நடைபெற்றது.

இந்த இறுதிப்போட்டியில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியும் அமிர்தகழி சித்திவிநாயகர் வித்தியாலயமும் மோதிக்கொண்டது.

இதன்போது 1.0என்று கணக்கில் அமிர்தகழி சித்திவிநாயகர் வித்தியாலயம் இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.

இதன் பரிசளிப்பு நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவர் எஸ்.உதயராஜ் தலைமையில் நடைபெற்றதுடன் இதில் பிரதம அதிதியாக இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவர் வி.ஜி.அனுர டி சில்வா கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார்,மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன்,அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்பரன்,உதவி உடற்கல்வி பணிப்பாளர் வி.லவகுமார்,மண்முனை வடக்கு கோட்டக்கல்விப்பணிப்பாளர் ஏ.சுகுமாரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போதுவெற்றி பெற்ற அணி வீரர்களுக்கான பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு வெற்றிக்கிண்ணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.