கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு மீண்டும் வழங்கப்பட்டது

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களிடமிருந்து மீளப் பெறப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு இன்று மாலை  மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக சபையின் பிரதி தவிசானர் பிரசன்னா இந்திரக்குமார்  தெரிவித்தார்.


நேற்று திங்கட்கிழமை மாலை பிரதித்தவிசாளருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு வாபஸ்பெறப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இன்று செவ்வாய்க்கிழமை மாலை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு என வழங்கப்பட்டிருந்த பொலிஸார் மீண்டும் அவர்களின் பாதுகாப்பு கடமைகளுக்காக திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு ஏற்கனவே தலா இரு பொலிஸாhர் பாதுகாப்பு கடமைகளுக்காக வழங்கப்பட்டிருந்தனர்.

பொலிஸ் தலைமையத்திலிருந்து கிடைத்த உத்தரவின் பேரில் இரு நாட்களுக்கு முன்பு எவ்வித முன்னிவித்தல்களும் இன்றி பொலிஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டு அவர்கள் கடமையாற்றும் பொலிஸ் நிலையங்களுக்கு மீள திருப்பி அழைக்கப்பட்டிருந்தனர்.

தங்களது பொலிஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டமைக்கு எதிராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளியிட்டிருந்தனர்.

இன்று நடைபெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வின் போதும் இது தொடர்பான  அவசர பிரேரணையொன்றை மாகாண சபை உறுப்பினர் முகமட் பாறுக் ஷிப்லி  முன் வைத்திருந்த நிலையில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானமொன்றும் நிறைவேற்றப்பட்டிருந்தது.

பொலிஸ் பாதுகாப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளதை மாகாண சபை உறுப்பினரான மொகமட பாறுக் ஷிப்லி உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் உறுதிப்படுத்தினார்கள்.