அனர்த்த முன்னாயத்த நிகழ்வு கல்லடியில் இடம்பெற்றது

பருவப்பெயர்ச்சி காலமான டிசம்பர் மாத காலப்பகுதியில் சூறாவளி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுவதாகவும் அவற்றினை அரசாங்கம் 48 மணி நேரத்தில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி இணைப்பாளர் ஏ.சி.எம்.அல்தாப் தெரிவித்தார்.

வதந்திகளை மக்கள் நிராகரித்து அவற்றினை உறுதிப்படுத்துவதற்கான வழிமுறைகளை மக்கள் அறிந்துகொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அனர்த்தங்களில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் கரையோரப்பிரதேச மாவட்டங்களில் நேற்று மாலை அனர்த்த ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு நேற்று மாலை கல்லடி பகுதியில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் நடாத்தப்பட்டது.

இதன்போது சைரன் ஒலி எழுப்பப்பட்டு பொதுமக்களை கல்லடி விபுலானந்த வித்தியாலயத்திற்கு வரைவழைக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் பிரதேச படை அதிகாரி ஜெகான் ஜெயநத்,களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.செல்வராசா,பிரதேச கிராம சேவை உத்தியோகத்தர் திருமதி வே.ஜீவிகா உட்பட சமுர்த்தி அதிகாரிகள்,அனர்த்தமுகாமைத்துவ நிலைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இயற்கை அர்த்தங்கள் ஏற்படும்போது பொதுமக்கள் அதில் இருந்து பாதுகாக்கும் வகையில் வழங்கப்படும் எச்சரிக்கையின்போது எவ்வாறு நடந்துகொள்வது என்பது தொடர்பில் இங்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

அனர்த்த காலங்களின்போது எச்சரிக்கைகளை ஏற்று செயற்படவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி இணைப்பாளர் ஏ.சி.எம்.அல்தாப் தெரிவித்தார்.

சிலர் அனர்த்த காலங்களின்போது எச்சரிக்கையினை பொருட்படுத்தாமல் பொருட்களை பாதுகாப்பதில் ஈடுபடுவதனால் இழப்புகள் அதிகரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சுனாமி அனர்த்த காலத்தின்போது தமது பொருட்களை பாதுகாக்க முனைந்தவர்களே அதிகளவில் உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்தார்.