மட்டக்களப்பில் சிறுவர்களின் உரிமையினை வலியுறுத்தி கவன ஈர்ப்பு பேரணி

சிறுவர்களின் உரிமையினை வலியுறுத்தியும் சிறுவர்களை பாதுகாக்குமாறு கோரியும் மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களின் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றதுடன் வாகனங்களில் சிறுவர் உரிமையை வலியுறுத்தும் ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டது.


மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

அண்மைக்காலமாக இந்த நாட்டில் சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் அநீதிகள் மற்றும் சிறுவர்களை பாதுகாக்க தவறும் பெற்றோர் போன்ற விடயங்களில் அவதானம் செலுத்தவேண்டும் என இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

சாணு பவுன்டேசனின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு கல்வி திணைக்களத்தின் அனுசரணையுடன் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டது.

இந்த கவன ஈர்ப்பு ஊர்வலமானது மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயம் முன்பாக ஆரம்பித்து பிரதான வீதி வரையில் நடைபெற்றது.

பிரதான வீதியில் பதாகைகளை ஏந்தியவாறு சிறுவர்கள் எம்மை சுரண்டாதீர்கள்,சிறுவர் துஸ்பிரயோகத்தினை நிறுத்துங்கள்,சிறுவர்களை துன்புறுத்தாதீர்கள் போன்ற கோசங்களை மாணவர்கள் எழுப்பினர்.

அத்துடன் வாகங்களுக்கு சிறுவர்கள் உரிமையை வலியுறுத்தும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டதுடன் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.