தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை இனப்பிரச்சினைக்கான பச்சைக்கொடியாகும் -ஞா.சிறிநேசன் பா.உ.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் பொறுப்புமிக்கவர்களும் இணைந்து சரியான முடிவினை எடுப்பார்கள் என்றால் நல்லாட்சிக்கு ஒரு நல்ல சகுணமாக அமைவதுடன் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான பச்சக்கொடியாகவும் அமையும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் மட்டக்களப்பு சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளை பாராளுமன்ற உறுப்பினர் சென்று பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு சிறைச்சாலையில் 10 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.இவர்களில் இருவர் சுகவீனமுற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சோர்வடைந்த நிலையில் உள்ளனர்.அவர்களிடம் கலந்துரையாடினேன்.அவர்களின் விடுதலை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.

இதனடிப்படையில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அதில் ஒருவர் பிணையில் செல்வதற்கான பிணையாளி வந்துள்ள நிலையில் மற்றவரை பிணையில் கொண்டுசெல்ல யாரும் வரவில்லை.அதன் காரணமாக அவரை பிணையில் கொண்டுசெல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளேன்.

தற்போது 32 தமிழ் அரசியல் கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இன்னும் 30பேர் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.அத்துடன் 116 கைதிகள் தங்களுக்கு புனர்வாழ்வு தந்து தங்களை விடுவிப்பதற்கு சம்மதமளித்து கையொப்பங்களை வழங்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் என்னிடம் தெரிவித்தார்.

116 தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படும் நிலையில் மிகுதியாக இருக்கும் ஏனையவர்களும் பிணையில் விடுவிக்கப்படும் நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை ஓரளவுக்கு முடிவுக்கு வரும் என கருதுகின்றேன்.இது தொடர்பில் கைதிகள் மத்தியிலும் பரிமாறிக்கொண்டேன்.

தங்களை விட பாரிய குற்றங்கள் இழைத்தவர்கள் பாரிய விடயங்களை கையாண்டவர்கள் வெளியில் இருக்கும்போது தங்களுக்கு இவ்வாறான நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது தொடர்பில் தமிழ் அரசியல் கைதிகள் கவலை தெரிவித்தனர்.

எஸ்.எம்.எஸ்.அனுப்பியதற்காக வாழைச்சேனையை சேர்ந்த மூவர் கடந்த ஒரு வருடமாக சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளது கவலைக்குரிய விடயமாகும்.மாவீரர் தினம் தொடர்பில் எஸ்.எம்.எஸ். அனுப்பிய இளைஞர்களே இவ்வாறு ஒரு வருடமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளதானது மிகவும் வேதனையான விடயகுமாகும்.
இந்த நிலையில் இவ்வாறான உண்ணாவிரத போராட்டத்தின் மூலம் தமது விடுதலையை பெறமுயற்சிப்பதானது நியாயமாக பார்க்கப்படவேண்டும்.
இது தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் பொறுப்புமிக்கவர்கள் இணைந்து சரியான முடிவினை எடுப்பார்கள் என்றால் நல்லாட்சிக்கு ஒரு நல்ல சகுணமாக அமைந்திருக்கும்.

நல்லாட்சியில் நல்ல தீர்வுகள் எடுக்கப்படுகின்றன.இந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையானது இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான பச்சக்கொடியாகவும் அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.