கொழும்பில் நடைபெறவுள்ள பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டத்திற்கு மட்டக்களப்பும் ஆதரவு

எதிர்வரும் 18ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள அகில இலங்கை பட்டதாரிகள் சங்கத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

வரவு செலவு திட்டத்தில் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பினையும் உள்ளடக்குமாறு வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் விசேட கூட்டம் இன்று காலை மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் யு.உதயவேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அகில இலங்கை பட்டதாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் தம்மிக்க முனசிங்க கலந்துகொண்டார்.

பட்டதாரிகள் ஒன்றுபட்டுசெயற்படுவதன் மூலமே பட்டதாரிகளுக்கான உரிமையினைப்பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் யு.உதயவேந்தன்,அரசியல்வாதிகளை நம்பி எந்த பிரயோசனமும் ஏற்படப்போவதில்லையென தெரிவித்தார்.

இதன்காரணமாக வரவு செலவுத்திட்டத்தில் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு தொடர்பில் உள்ளடக்கப்படவேண்டும் என மேற்கொள்ளப்படவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கம் பூரண ஆதரவு வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

புதிய அரசாங்கம் பட்டதாரிகள் தொடர்பில் எந்தவித ஆக்கபூர்வமான செயற்பாட்டினையும் மேற்கொள்ளவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள்,பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.