காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் நிறுக்கும் ,அளக்கும் கருவிகளுக்கு முத்திரையிடும் பணிகள் ஆரம்பம்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்களில் பாவனையிலுள்ள நிறுக்கும் ,அளக்கும் கருவிகளுக்கு முத்திரையிடும் பணிகள் தற்போது  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைவாக காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் வர்த்தக நிலையங்களில் பாவனையிலுள்ள நிறுக்கும் ,அளக்கும் கருவிகளுக்கு 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கான முத்திரையிடும் பணிகள் திங்கட்கிழமை காத்தான்குடி பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் போது தற்போது பாவனையிலுள்ள நிறுக்கும் ,அளக்கும் கருவிகளுக்கு அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் அதிகாரிகளினால் முத்திரையிடப்பட்டது.

வர்த்தக நிலையங்களில் பொருட்கொள்வனவில் ஈடுபடும் நுகர்வோரினை பாதுகாக்கும் வகையில் இடம்பெறும் இச் செயற்றிட்டம் மட்டக்களப்பு மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ஏ.எல்.நௌசாத் தெரிவித்தார்.

மேற்படி விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் பாவனையிலுள்ள நிறுக்கும் ,அளக்கும் கருவிகளுக்கு முத்திரையிடும் பணிகள் நேற்று 02 திகதி தொடக்கம் எதிர்வரும் 18ம் திகதி வரை இடம்பெறும் எனவும் இந்த காலப்பகுதியில் நிறுக்கும் ,அளக்கும் கருவிகளுக்கு முத்திரையிடாத வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வர்த்தக நிலையங்களில் முத்திரையிடப்படாத தராசுகள் பாவனைக்கு முற்றாக தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் வருடாந்தம் இந்த முத்திரையிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.