உயிர்வாயு தொழிநுட்பத்தினை விரிவாக்குதல் தொடர்பில் மாகாணமட்ட பயிற்சி மட்டக்களப்பில்

இலங்கையிலும் சர்வதேச மட்டத்திலும் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியை உறுதிசெய்யும் நோக்கில்; காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்காக உயிர்வாயு தொழிநுட்பத்தை விரிவாக்குதல் சம்பந்தமான மாகாண மட்ட பயிற்சி நெறி இன்று வியாழனன்று மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் ஆரம்பமானது.

 இரு தினங்களுக்கு இடம்பெறவுள்ள இந்தப்பயிற்சி நெறியில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி நிருவாகத்தில் கடமையாற்றும் சுமார் 25 தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளதாக பயிற்சி வளவாளரும் ஜனதாக்ஸன் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளருமான அனுலா அன்ரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை. சலீம் உயிர்வாயு தொழினுட்பத்தை விரிவாக்குதல் சம்பந்தமான மாகாண மட்ட பயிற்சி நெறியை ஆரம்பித்து வைத்தார்.

உயிர்வாயு தொழினுட்பம் பற்றி விழிப்புணர்வூட்டும் தேசிய, மாகாண மற்றும் மாவட்ட ரீதியிலான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களின் ஒரு அங்கமாக இந்தப் பயிற்சி இடம்பெறுகிறது.

நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை சலீம் கூறியதாவது,

திண்மக் கழிவு முகாமைத்துவத்தை மேற்கொள்வதில் இந்த உயிர் வாயுத் தொழினுட்பம் அதிகளவான நன்மைகளை ஈட்டித் தரக்கூடியது.
உயிர் வாயு தொழினுட்பத்தைப் பயன்படுத்துவதால் பல்வகைப்பட்ட நன்மைகள் கிடைக்கின்றன.

உயிர்வாயு தொழினுட்பத்தின் மூலம் மீள் சுழற்சி முறையில் இயற்கைக்குக் கேடு விளைவிக்காத விதத்தில் மின்சாரம், இயற்கை எரிவாயு, பசளை, நீர் என்பனவற்றையும் சுழற்சி முறையில் தொடர்ந்து பெற்றுக் கொண்டே இருக்கலாம்.

இதனால் நாம் இயற்கைச் சூழலை கேடு விளைவிக்காத விதத்தில் பேணிப் பாதுகாப்பதோடு எமது பொருளாதாரத்தையும் கூடியளவு மீதப்படுத்திக் கொள்ளவும் முடிகிறது” என்றார்.

இன்றைய நிகழ்வில் ஜனதாக்ஸன் நிறுவனத்தின் இணைப்பாளரும் வளவியலாளருமான அனுலா அன்ரன், பொறியியலாளரும் உயிர்வாயுத்  தொழினுட்ப நிபுணருமான றோஹித ஆனந்த, திட்ட முகாமையாளரும் பொறியியலாளருமான தமித சமரகோன் ஆகியோரும் கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களின் தொழினுட்பவியலாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

உயிர்வாயு தொழினுட்பத்தை ஊக்குவிப்பதற்கான திட்டமொன்றை தேசிய மற்றும் மாகாண ரீதியில் அபிவிருத்தி செய்வதற்காக தெரிவு செய்யப்பட்ட முக்கிய பகுதிகளில் பயிற்சிப் பட்டறைகளும் அமர்வுகளும் நடத்தப்பட்டு வருவதாக அனுலா அன்ரன் தெரிவித்தார்.