சட்ட விரோதமாக கொண்டுசெல்லப்பட்ட விலையுயர்ந்த மரங்கள் காத்தான்குடியில் மீட்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட பெறுமதி மிக்க ஒரு தொகை மரக்குற்றிகள் காத்தான்குடி பொலிசாரினால் கைப்பற்றப்பட்டது.

அம்பாறை விபிலை பிரதேசத்திலிருந்து நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை லொறி ஒன்றில் காத்தான்குடி பிரதேசத்திற்கு கொண்டுவரப்பட்ட மரக்குற்றிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி.கோணர தெரிவித்தார்.

லொறி ஒன்றில் கொண்டுசெல்லப்பட்ட தேக்கு மரக்குற்றிகள் 12, முத்திரை மரக்குற்றிகள் 41 கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தியபோது இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், லொறிக்கு  50,000 தண்டப்பணமும் விதிக்கப்பட்டதாகவும் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

அத்துடன் மரக்குற்றிகளை நீதி மன்றில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.