தண்ணீரினால் ஏற்படும் நோயினால் 20 செக்கனுக்கு ஒரு குழந்தை இறக்கின்றது - நிபுணர் டாக்டர் வைதேகி ஆர் பிரான்சிஸ்

உலகில் தண்ணீரினால் ஏற்படும் நோய் காரணமாக 20 செக்கன்களுக்கு ஒரு குழந்தை இறப்பதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் டாக்டர் வைதேகி ஆர் பிரான்சிஸ் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்கள் சுத்தமான குடிநீரைப்பெற்றுக்கொள்வது தொடர்பிலான அறிவூட்டும் நிகழ்வுகள் மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டுவருகின்றன.

இதன்கீழ் மட்டக்களப்பு வின்சன்ட் உயர் தேசிய மகளிர் பாடசாலையில் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான குடிநீரை உறுதிப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று காலை பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் நடாத்தப்பட்டது.

பாடசாலை அதிபர் திருமதி கனகசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் டாக்டர் வைதேகி ஆர் பிரான்சிஸ் மற்றும் மாநகரசபையின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்கள் சுத்தமான குடிநீரைப்பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த விசேட செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய வைத்திய நிபுணர் டாக்டர் வைதேகி ஆர் பிரான்சிஸ்,

வைத்தியசாலையில் நோயினால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவோரில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் நோயினால் பாதிக்கப்பட்டவர்களாகவே உள்ளனர்.

நீரினை சுத்தமான முறையில் பருகாவிட்டால் பல்வேறு தொற்று நோய்களுக்கு உட்படும் நிலைமையேற்படுகின்றது.

உலகில் 3.5மில்லியன் பேர் நீரினால் ஏற்படும் நோயினால் இறக்கின்றனர்.ஆபிரிக்க நாடுகளிலேயே அதிகளவான இறப்புகள் ஏற்படுகின்றன.

நீரினால் ஏற்படும் பிரச்சினையின் முக்கியமாக கருதப்படுவது வயிற்றோட்டமாகும்.உலகில் பயங்கரவாத தாக்குதல்களினால் இறப்பவர்களை விட இந்த வயிற்றோட்டத்தினால் இறப்பவர்களே அதிகமாகவுள்ளனர்.பயங்கரவாதத்திற்கு எதிராக அக்கரையுடன் செயற்படும் நாடுகள் அதே அக்கரையை இந்த வயிற்றோட்டத்திற்கு காட்டுவதில்லை.

இதேபோன்று கொலறா போன்ற நோய்களும் தண்ணீர் தொற்றினால் ஏற்படுகின்றது.200ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் கொலறா அறிக்கையிடப்படாத நிலையே இருக்கின்றது.எனினும் எமது அண்டை நாடான இந்தியாவின் தமிழ் நாட்டில் இதன் தாக்கம் உள்ளது.இங்கிருந்து அங்கு செல்பவர்கள் ஊடாக அது இங்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.அது ஒருவருக்கு ஏற்பட்டால் அந்த பிரதேசத்தினையே அது தாக்கக்கூடியதாகவுள்ளது.