நாற்பதுவட்டை விபுலாநந்தா மாணவர்களுக்கு மண்வாசனை அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

"தாயக உறவுகளின் துயர்துடைப்போம்" எனும் தொனிப்பொருளில் கனடாவில் இயங்கி வரும் "மண்வாசனை அமைப்பு"   யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மிகவும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் 159 மாணவர்களுக்கு அவர்களது அடுத்த ஆண்டிற்கான  கல்வியை சிறப்பான முறையில் முன்னெடுக்கும் முகமாக அவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தனர்.

மட்டக்களப்பு மண்முனை மேற்கு கல்வி  வலயத்தின் மிகவும் பின்தங்கிய பாடசாலையாகிய  நாற்பதுவட்டை விபுலாநந்தா வித்தியாலய மாணவர்களுக்கே  இவ்வமைப்பினால் புத்தகப்பை, அப்பியாசக் கொப்பிகள், கொம்பாஸ் பெட்டி மற்றும் சப்பாத்து போன்ற  சுமார் மூன்று இலட்சம் பெறுமதியான கற்கை உபகரணங்களை வழங்கியிருந்தனர். 

இந்நிகழ்விற்கான இணை அனுசரணையை மட்டக்களப்பு பெண்கள் லயன்ஸ் கழகம் வழங்கியிருந்தது. அத்தோடு இந்நிகழ்விற்கு அதிதிகளாக வலயக் கல்விப் பணிப்பாளர் சத்தியநாதன், 306 சீ2 லயன்ஸ் அமைப்பின் செயலாளர்  லயன். செல்வேந்திரன்,
மட்டக்களப்பு பெண்கள் லயன்ஸ் கழகத்தின் தலைவி சாந்தா ஞானப்பிரகாசம், 
மட்டக்களப்பு பெண்கள் லயன்ஸ் கழகத்தின் முன்னாள் தலைவி  ஜெயப்பிரபா சுரேஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இம்மக்கள் தங்களது கல்வியை முன்னெடுத்துச் செல்ல கற்றல் உபகரணங்கள் இல்லாமை ஓர் தடையாக இருக்கக் கூடாது என்பதை உணர்ந்து கனடாவாழ் மண்வாசனை அமைப்பைச் சேர்ந்த மக்கள் இவ்வாறான  உதவியினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.