சுகாதார அமைச்சின் “ஒளிக்கான யாத்திரை” இன்று மட்டக்களப்பில் ஆரம்பம்

நடமாடும் கண் சிகிச்சை உருவாக்கும் நோக்குடன் நிதி சேகரிப்பினை நோக்காகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள “ஒளிக்கான யாத்திரை” இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பில் ஆரம்பமானது.

சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் ஏழை மக்களுக்கு அவர்களின் காலடிக்கு சென்று இலவச கண்சிகிச்சையை வழங்கும் நோக்கில் இந்த நடமாடும் கண்சிகிச்சை பிரிவு உருவாக்கப்படவுள்ளது.

இதனையொட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒளிக்கான யாத்திரை நிதி சேகரிப்பு பாதயாத்திரை இன்று காலை 9.30மணியளவில் மட்டக்களப்ப காந்தி பூங்கா முன்றிலில் ஆரம்பமானது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித குணரட்ன மகிபால தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தன்,மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் இரா.நெடுஞ்செழியன்,மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் உட்பட வைத்தியசாலை அத்தியட்சர்கள்,தாதியர்கள்,பொதுச்சுகாதார பரிசோதகர்கள் உட்பட பெருந்திரளானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இலங்கையில் 330கிலோமீற்றர் கொண்டதாகவும் 17 நாட்கள் கொண்டதாகவும் இந்த நிதி சேகரிப்பு பாதயாத்திரை மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த நிகழ்வின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட ஒரு தொகை நிதியும் பணிப்பாளர் நாயகத்திடம் வழங்கிவைக்கப்பட்டது.